தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையால் வாழத் தகுதியற்றதாக மாறும் மணலி:  பாதிக்கப்படும் குழந்தைகள், முதியோர்; கவனிக்குமா மாசு கட்டுப்பாட்டு வாரியம்?

தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையால் வாழத் தகுதியற்றதாக மாறும் மணலி:  பாதிக்கப்படும் குழந்தைகள், முதியோர்; கவனிக்குமா மாசு கட்டுப்பாட்டு வாரியம்?
Updated on
2 min read

மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறுவதால் குழந்தைகள், முதியோருக்கு இருமல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதனால் இப்பகுதி வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

சென்னையில் பெரிய தொழிற் சாலைகள் நிறைந்த பகுதி மணலி. இங்கு உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறி வருகிறது.

2.5 மைக்ரோ மீட்டர் அளவுள்ள துகள் (மாசு), ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இப்பகுதியில் 5 மடங்குக்கு மேல், அதாவது ஒரு கன மீட்டர் காற்றில் 362 மைக்ரோ கிராம் வரை மாசு இருப்பதாக, இங்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள காற்றுத் தர கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 18-ம் தேதி அதிக அளவில் கரும்புகை பரவி, காற்றை கடுமையாக மாசுபடுத்தியது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று மாசுவை ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கும் ‘கேர் ஏர் சென்டர்’ என்ற மையத்தை உரு வாக்கியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. ஆனால் மணலியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாத்தூர் எம்எம்டிஏ மக்கள் நலச்சங்க செயலர் ஆர்.எஸ்.பாபு கூறியதாவது:

மணலி பகுதியில் உள்ள தொழிற் சாலைகளில் இருந்து புகை வெளியேறு வது தொடர்கதையாக உள்ளது. அதனால் காற்று மாசுபடுவதால், மணலி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் குழந்தைகள், முதியோருக்கு இருமல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதனால் இப்பகுதிகள் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளன.

இதுதொடர்பாக கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம், அம்பத்தூரில் உள்ள மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் உயிரைவிட, தொழிற்சாலை உற்பத்திக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, காற்று மாசுக்கு காரணமான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

மாசு ஏற்படுத்திய சிபிசிஎல்

இதற்கிடையில், மணலி பகுதியில் கடந்த 18-ம் தேதி பிற்பகலில் தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறும் புகைப்படத்தை, தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் ஷம்பு கல்லோலிகருக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் மணலியில் நேற்று ஆய்வு நடத்தினர். இதில், அங்கு உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகை வந்தது ஏன்?

இதுதொடர்பாக சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிபிசிஎல் நிறுவன அலகு ஒன்றில் கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு வேலை நடந்தது. பணிகள் முடிந்து, ஆலையை இயக்கியபோது, பயன்பாட்டு தரத்தில் இல்லாத அசுத்தமான பெட்ரோலிய பொருட்கள் வெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன. புகை வெளியேற அதுவே காரணம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in