‘சர்கார்’ சர்ச்சை; மன்னிப்பு கோர முடியாது, வருங்காலத்திலும் விமர்சிப்பேன்: முன் ஜாமீன் வழக்கில் தமிழக அரசுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

‘சர்கார்’ சர்ச்சை; மன்னிப்பு கோர முடியாது, வருங்காலத்திலும் விமர்சிப்பேன்: முன் ஜாமீன் வழக்கில் தமிழக அரசுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதில்
Updated on
2 min read

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டதற்கு மன்னிப்பும் கோர முடியாது, எழுதித்தரவும் முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்  சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கிய சர்கார், கதைத்திருட்டு வழக்கிலும் சிக்கி மீண்டது.

படம் வெளிவந்தப்பின் மேலும் எதிர்ப்பைச் சந்தித்தது. சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கும் வரை படத்தை திரையிடக்கூடாது என தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த வழக்கில், தன்னை காவல்துறை எந்நேரமும் கைது செய்யலாம் என்பதால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைது செய்ய கூடாது என இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது முருகதாஸ் தரப்பில்,  ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டும், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் தனது வாதத்தை வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு நாளை (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்தது, இலவச பொருட்களை எரித்தது போன்ற காட்சிகளை அமைத்தது தன் கருத்து சுதந்திரம் என்றும், அரசு கோருவது போல் மன்னிப்பு கோர முடியாது தெரிவித்தார்.

மேலும் இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப் போவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதனை பதிவு செய்த நீதிபதி, காவல்துறையில் அளித்த புகாரை சட்டத்திற்குட்பட்டு 2 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 13-ஆம் தேதி ஒத்திவைத்தார்.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என்ற நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்ட நீதிபதி ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in