Published : 13 Nov 2018 04:51 PM
Last Updated : 13 Nov 2018 04:51 PM

மருத்துவமனையில் நெல் ஜெயராமனை சந்தித்து அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமனை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்தவர் நெல் ஜெயராமன்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியைப் பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்த பெருமை நெல் ஜெயராமனுக்கு உண்டு.

இவரது சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருதும், தமிழக அரசு , கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கியும் கவுரவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது நிலையை உணர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதலும் உதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணரெட்டி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நெல் ஜெயராமனுக்கு வேண்டிய சிகிச்சைக்கான உதவியை அரசு செய்யும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x