எழும்பூரில் ஓடும் ரயிலில் சிக்கிய பயணி: உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு
சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏறும்போது கீழே விழுந்து ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கி உயிருக்கு போராடிய பயணியை துரிதமாக செயல்பட்டு இழுத்துக்காப்பாற்றிய காவலரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக பைசாபாத் செல்லும் சர்தார் சேது எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர் அந்த ரயில் எழும்பூர் 5-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. அப்போது ரயிலை தவறவிட்ட பயணி ஒருவர் ரயிலைப்பிடிப்பதற்காக பொதுப்பெட்டியில் ஏற முயன்றார்.
அப்போது அவரது கை நழுவி நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அவர் சற்று நேரத்தில் ரயில்பெட்டிக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கிவிடுவார் என்கிற நிலையில் பிளாட்பாரத்தில் பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த ரயில்வே காவலர் சுமன் இதைப்பார்த்தார்.
சட்டென்று ஓடிச்சென்று அந்தப்பயணியை சட்டையைப் பிடித்து இழுத்து பிளாட்பாரத்தில் போட்டார். ரயில் வேகமாக சென்றுவிட்டது. பயணி அதிர்ச்சியில் உறைந்த நிலையில் பிளாட்பாரத்தில் கிடந்தார். மற்ற பயணிகளும் இதை அதிர்ச்சியில் பார்த்தப்படி நின்றனர். துரிதமாக செயல்பட்டு பயணியை இழுத்ததால் அவர் சக்கரத்தில் சிக்கவில்லை. இல்லாவிட்டால் அவர் நொடிப்பொழுதில் உயிரிழந்திருப்பார்.
தன்னைக் காப்பாற்றிய காவலருக்கு காப்பாற்றப்பட்ட பயணி நன்றி தெரிவித்தார். அந்த பயணிக்கு புத்தி சொல்லி காவலர் சுமன் அனுப்பி வைத்தார். பயணியின் உயிரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் சுமனை ரயில்வே காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.
மேற்கண்ட காட்சிகள் அனைத்து பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளைக் கண்ட ரயில் அதிகாரிகள் சுமனை வெகுவாகப் பாராட்டினர்.
