

நாகர்கோவிலில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச உள்ளார். புத்தகத் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு நாகர்கோவில் வந்திருந்த அவர், `தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்து விட்டதாக தமிழகம் முழுவதும் திமுக பரப்புரை செய்து வருகிறதே?
சட்டமன்றத்தில் ஒரு துறை குறித்து விவாதிக்கும்போது, குற்றச்சாட்டுகளை பேரவைத் தலைவரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றே பேச வேண்டும். இந்த சட்டமன்ற மரபை திமுக பின்பற்றுவதில்லை. முதல்வரை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் வெளிநடப்பு என்ற பெயரில் நாடகம் போடுகிறது.
திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் ராஜினாமா கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதே?
கடந்த 30 ஆண்டுகளாக ஸ்டாலினோடு இணைந்து இருந்தவர் கல்யாணசுந்தரம். ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும். கனிமொழி, ஆ.ராசா, தயாநிதிமாறன் ஆகியோரை கட்சியில் இருந்து விலகி இருக்க சொல்ல வேண்டும் என தலைமைக்கு கடிதம் எழுதினார். ஸ்டாலினின் உள் மனதில் இருக்கும் ஆசைகளே அக்கடிதம் வழியே வெளிப்பட்டது. அதே நேரத்தில் ஸ்டாலினின் தலைமை, திமுகவை புதைகுழியில் தள்ளும் என்பதற்கு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலே சாட்சி.
திமுக தன்னுடைய முதல் வெற்றியை 1957-ல் பெற்றது. இப்போது அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதே 1957-ல் தான் `இந்துஸ்தான் மோட்டார்ஸ்’ அம்பாசிடர் காரை உற்பத்தி செய்து சாலைகளில் ஓடவிட்டது. அந்த காரின் உற்பத்தி கடந்த மாதம் 24-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அம்பாசிடர் கார் இனி சாலைக்கு வராது. இப்போது அறிவாலயத்தின் கதியும், அம்பாசிடரின் கதிதான். திமுக சக்கரம் இனி சுழலாது.
2016 சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கும்?
எதிரிகளே இல்லாத போர்க்களம் அமையப் போகிறது. எதிர்ப்பதற்கு ஆள் இல்லாமல், அதிமுக மீண்டும் 2016-ல் அரியணை ஏறும். எனக்கு போர் அடிக்கும் என்பது மட்டும்தான் இப்போதைய கவலை.
முதல்வர் ஜெயலலிதாவிடம் நீங்கள் சிலாகித்த விஷயம் எது?
நிறையவே இருக்கின்றன. முப்படைகளுக்கும் உத்தரவிடும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, ஐநா சபையில் குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் எளிதில் தப்பிப்பவர். ஒரே நேரத்தில் இந்தியாவையும், சீனாவையும் ஏமாற்றுபவர். ராஜபக்சவின் அகராதியில் முதன்முதலாக மன்னிப்பு கேட்டது முதல்வரிடம்தான். இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுக்கும் கிடைத்த வெற்றி.
18 ஆண்டுகள் நீங்கள் செயல்பட்ட மதிமுகவை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?
மதிமுக தினசரி டயாலிசிஸ் செய்து கொள்கிற சிறுநீரக நோயாளியின் நிலைக்கு சென்று விட்டது. இனி அதற்கு எதிர்காலம் இல்லை. உதிர் காலம்தான்.