

விருகம்பாக்கத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கவந்த ஒரு மூதாட்டி, ஒரு முதியவர் கவனத்தை திசைத்திருப்பி அவர்கள் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது போலீஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 20 ஆயிரம் பணத்தை நூதன முறையில் திருடிய நபர் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். ஒரே வாரத்தில் இது 2-வது திருட்டை அரங்கேற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (65). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். நேற்று பணம் எடுப்பதற்காக தனது மகனுடன் விருகம்பாக்கம் அபுசாலி தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.
வெளியே மகன் நிற்க இவர் உள்ளே சென்று ஏடிஎம் எந்திரத்தில் கார்டை சொருகி பணம் எடுக்க முயல பணம் மிஷினில் இருந்து பணம் வரவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு நபர் என்ன ஆச்சு என கேட்க நடந்ததைக் கூறி பணம் வரவில்லை என்று திருவேங்கடம் கூறியுள்ளார்.
கொடுங்கள் நான் ட்ரைப்பண்ணுகிறேன் அவரிடமிருந்து ஏடிஎம் கார்டை தான் உதவி செய்வதாக கூறி வாங்கி மிஷினில் பொருத்தியுள்ளார். பணம் வந்துள்ளது. பணம் வெளியே வரும் சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு திருவேங்கடத்தின் ஒரிஜினல் ஏடிஎம் கார்டை அவர் வைத்துக்கொண்டார்.
இதை அறியாத திருவேங்கடம் தனது மகனுடன் வீட்டுக்கு திரும்ப ஏற்கெனவே திருவேங்கடத்தின் ஏடிஎம் கார்டை வைத்து அவரது பின் நம்பரை பதிவு செய்து ரூ. 20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பிச்சென்றார்.
வீடு திரும்பியதும் திருவேங்கடத்தின் செல்போனில் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் ரூ. 20 ஆயிரம் பணம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்து கார்டு ந்ம்மிடம் உள்ளது பணத்தை யார் எடுத்திருக்க முடியும் என்று கார்டை பார்த்தபோது அது போலி ஏடிஎம் கார்டு என தெரிய வந்தது.
இது தொடர்பாக திருவேங்கடம் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரைப்பெற்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை போலவே கடந்த 27-ம்தேதி விருகம்பாக்கத்தில் மூதாட்டி நாராயணியிடம் இதே நபர் இதே பாணியில் ரூ. 37 ஆயிரம் பணத்தை ஏமாற்றி எடுத்துச்சென்றார்.
ஒரே வாரத்தில் விருகம்பாக்கத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ஒரே நபர்தான் இந்தக்காரியத்தை செய்திருக்கலாம் என போலீஸார் யூகிக்கின்றனர்.
பொதுமக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், அவ்வாறு உதவி தேவை என்றால் செக்யூரிட்டியோ அல்லது அக்கம் பக்கத்தில் கடைகள், அலுவலகங்களில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு பணம் எடுக்கலாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.