Published : 26 Nov 2018 08:24 AM
Last Updated : 26 Nov 2018 08:24 AM

கற்பனை செய்ததை விடவும் கஜா புயலால் கடுமையான பாதிப்பு: தஞ்சை, திருவாரூர் ஆய்வில் மத்திய குழுவினர் அதிர்ச்சி

விவசாயிகள் நிலை பரிதாபம் என வேதனை | பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

தஞ்சாவூர், திருவாரூர் மாவட் டங்களில் கஜா புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நாங்கள் கற்பனை செய்ததை விடவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை, மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவி னர், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில், புயலால் சேதமடைந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை மத்திய குழுவினர் பார்வையிட்டு சேத விவரம் குறித்து கேட்டறிந்தனர். ஆறுமுகத்தின் மகள் ராதா, புயலால் வீடு சேதமடைந்ததால் மழையிலும் குளிரிலும் தவிப்பதாகவும் வீட்டை சீரமைக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

தொடர்ந்து, புலவன்காடு கிராமத்தில் விவசாயி நாகராஜூக்கு சொந்தமான 4 ஏக்கர் தென்னந் தோப்பு புயலால் முற்றிலும் அழிந்துள்ளதை பார்வையிட்டு, சேதம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, அரசு அறிவித்துள்ள நிவாரணத்தில் தென்னை பாதிப் புக்கு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு போதாது, ரூ.10 லட்சம் வழங்கினால்தான், ஓரளவு மீண்டெழ முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பின்னர், பட்டுக்கோட்டையை அடுத்து புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில், 282 ஹெக்டேரில் சேதமடைந்த தென்னை, பாக்கு, பலா உள்ளிட்ட மரங்களின் சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

அங்கு விவசாய சங்க நிர்வாகிகள் வே.துரைமாணிக்கம், பி.ஆர்.பாண்டியன், வா.வீரசேனன் உள்ளிட்டோர் மத்திய குழுவினரிடம் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். தென்னை வளர்ச்சி வாரிய முன்னாள் துணைத் தலைவர் கலைச்செல்வன், ‘‘இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து போனதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரங்களை அரைத்து இயற்கை உரம் உள்ளிட்ட மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், நிதி உதவிகள் வழங்க வேண்டும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து, அதிராம் பட்டினத்தை அடுத்த மல்லிப் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் புயலால் உருக்குலைந்து கிடந்த படகுகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, 246 விசைப் படகுகள், 832 இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 147 கட்டுமரங்கள், 1,428 மீன்பிடி வலைகள், 1,440 படகு இன்ஜின்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, பட்டுக்கோட் டையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் கற்பனை செய்ததை விடவும் பாதிப்பு கடுமையாக உள்ளது. விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது’’ என அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம்

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கல்லடி கொல்லையில், நாக ராஜன் என்பவருக்கு சொந்த மான தென்னந்தோப்பில் சாய்ந்து விழுந்த மரங்களை பார்வை யிட்டனர். பின்னர், அங்குள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை மத்திய குழுவினர் சந்தித்து குறைகளை கேட்டறிந் தனர்.

பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம் ஆகியோர் மத்திய குழுவிடம் மனு அளித்தனர். அப்போது, எத்தனை மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டாலும், பாதிப்புகளை பார்வையிடுகிறார்களே தவிர, அதன் பின்னர் மத்திய அரசு அளிக்கும் நிதி குறைவாக உள்ளது எனவும், இந்த முறை முன்புபோல் இல்லாமல், அதிக பாதிப்பு இருப்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி கூடுதல் நிதி பெற்றுத் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அதேபோல, பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரும் மனு அளித்தனர்.

தொடர்ந்து தில்லைவிளாகம், தொண்டியக்காடு, கற்பகநாதர் குளம், இடும்பவனம், உதயமார்த் தாண்டபுரம், எடையூர் சங்கேந்தி, பாண்டி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நிவாரண முகாம் களையும் அந்தப் பகுதிகளில் புயலால் சேதமடைந்த வீடுகள், மரங்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கற்பக நாதர்குளம் கிராமத்தில் செய்தி யாளர்களிடம் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறும்போது, ‘‘பாதிப்புகளை கணக்கெடுத்து, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம். ஆய்வு பணிகள் முடிந்ததும் தமிழக முதல்வரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. புயல் பாதித்த அனைத்து இடங்களிலும் மக்கள் தைரியமாக உள்ளனர்’’ என்றார்.

ஆய்வின்போது, தமிழக அமைச்சர்கள் ஆர்.காமராஜ், செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x