

'கஜா' புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
'கஜா' புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயப் பாதிப்புகள், கால்நடைகள் உயிரிழப்பு, போக்குவரத்து துண்டிப்பு, உணவு - குடிநீர் பற்றாக்குறை, மின்வசதி துண்டிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.