Published : 13 Nov 2018 01:24 PM
Last Updated : 13 Nov 2018 01:24 PM

ரஜினி மாற்றிமாற்றிப் பேசுகிறார்; அரசியலில் அவர் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் அரசியலில் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேரிடர் மீட்பு உபகரணம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஜெயலலிதா இறந்த பின் நடிகர்களுக்கு குளிர்விட்டுப்போனது என கூறிய கருத்தால், அமைச்சர்கள் தரம் தாழ்ந்து பேசக்கூடாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாரே?

முன்பின் முரணாக பேசுபவர்களுக்காகவே அத்தகைய கருத்து கூறப்பட்டது. எல்லோருக்கும் அது பொருந்தாது. இது தரம் தாழ்ந்த கருத்து கிடையாது. நாளுக்குநாள் மாறுபவர்களுக்கே அந்த கருத்து பொருந்தும்.

சென்சார் போர்டு தலையிட்ட பின்னர் சர்கார் பிரச்சினையை அதிமுக பெரிதுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறதே?

ஒரு திரைப்படம் சமூகத்திற்கு உகந்ததா இல்லயா, எந்த தலைவரை அவமானப்படுத்துகிறது என்பது பார்த்தால் தான் தெரியும். இந்தியில் ஒரு திரைப்படம் இந்திராகாந்தியை சிறுமைப்படுத்துவதாக கூறி அதன் நெகட்டிவை கொளுத்தினர். தொண்டர்கள், மக்கள் மறைந்த தலைவரை அவமானப்படுத்துவதாக சர்கார் படம் உள்ளது என கருதியதால், அவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஒரு திரைப்படத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது.

சர்கார் விவகாரத்தில் அதிமுகவினர் செயல்பாடுகளுக்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாரே?

முடிந்துபோன சமாச்சாரம். காட்சிகளை நீக்கியாகி விட்டது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வு அது. பொதுமக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு.

பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் கூறிய இன்றைய கருத்து குறித்து?

நேற்று ஒன்றை சொல்லிவிட்டு இன்றைக்கு மாற்றி சொல்லியிருக்கிறார். மக்கள்தான் இறுதி எஜமானர்கள். சுயாட்சி அடிப்படையில் எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மற்ற கட்சிகளின் நிலைமை குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ரஜினி கூறியுள்ளாரே?

நேற்றே அவர் இதுகுறித்து சொல்லியிருக்கலாமே. காலம் தாழ்த்தி சொல்கிறார். சினிமாவில் அவர் ஹீரோவாக இருக்கலாம். அரசியலில் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானம் செய்வார்கள்.

தமிழகத்தில் பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா?

சான்றிதழ் வழங்க நாங்கள் சென்சார் போர்டு கிடையாது. ஆட்சி மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x