Published : 28 Nov 2018 04:22 PM
Last Updated : 28 Nov 2018 04:22 PM

வா வெண்ணிலா ; ‘டிக் டாக்’ மியூசிக்கல் செயலியில் சீருடையில் சினிமா பாட்டுபாடி சர்ச்சையில் சிக்கிய மவுண்ட்  ஆயுதப்படை துணை ஆணையர்

சென்னை மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையர் சீருடையில் சினிமாப் பாட்டுப்பாடி ‘டிக்டாக்’ செயலியில் காணொளி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கடும் பணிச்சுமையுடன் ஓடிக்கொண்டிருக்க ஜாலியாக சினிமா பாட்டுப்பாடி டிக்டாக்கில் காணொளி வெளியிட்ட துணை ஆணையரின் செயல் காவலர்களிடையே கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில் எஸ்.ஐக்கு கீழ் அந்தஸ்த்தில் உள்ள காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை உபயோகிக்கக் கூடாது மேலதிகாரி அனுமதிக்காத பட்சத்தில் பயன்படுத்தக்கூடாது என்று இருந்தது. இது தமிழகம் முழுதும் காவலர்களிடையே விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

முக்கிய பணி நேரங்களில், தகவல் பரிமாற, போட்டோக்கள், மெயில் அனுப்ப வாட்ஸ் அப் மூலம் குற்றம் சம்பந்தப்பட்ட தகவல்களை அதிகாரிகளுக்கு அனுப்ப செல்போன் பெரிதும் பயன்படுகிறது, பேஸ் டிடக்டர் செயலி மூலம் குற்றவாளிகளை பிடிக்கவும் காவல்துறையில் வசதி ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் இதுபோன்ற உத்தரவை காவலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் காவல்துறை உயர் பொறுப்பில் உள்ள துணை ஆணையர் ஒருவர் சினிமா பாடல்களுக்கு வாயசைத்து நடித்து டிக்டாக் செயலி ஆப்பில் விதவிதமாக வெளியிட்டுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

டிக்டாக் செயலி அறிமுகப் படுத்தப்பட்டப்பிறகு குடும்பத்தலைவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், சிறுவர்கள், திருநங்கைகள் என அனைவரும் சினிமா பாடல்கள் பாடி நடித்து காணொளி வெளியிடுவது வாடிக்கையாகி வருகிறது. கதாநாயகர்களின் சினிமா வசனங்களை அவரைப்போலவே பேசுவதும் நடிப்பதும் என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் வடிகாலாக டிக்டாக் மாறி வருகிறது.

சமயத்தில் இது ஆபாச நடன அசைவுகளுடன் பெண்கள் ஆடுவதும் நடக்கிறது. இதனால் வரும் காலங்களில் புதிய பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது என்கின்றனர் சைபர் பிரிவு நிபுணர்கள். ஆர்வாக்கோளாறில் சினிமா பாட்டுக்கு நடனமாடி  அதை டிக்டாக்கில் வெளியிடும் குடும்ப பெண்கள் லைக்குக்காக இதை வெளியிடுகின்றனர். ஆனால் அதை சில சமூக விரோதிகள் மார்பிங் செய்து வேறுவிதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

இதனால் பாதிக்கப்படும் பெண்கள் தற்கொலை முடிவுவரை செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இதுபோன்ற மனநிலையை உளவியல் நிபுணர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடாக பார்க்கின்றனர். அனைவரும் இதை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் ஏதாவது செய்து தங்களை வெளிப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளவர்கள் இதில் ஈடுபட்டு பின்னர் பல சிக்கலில் மாட்டுகின்றனர் என்கின்றனர்.

சாதரண மன நிலையில் உள்ளவர்களை டிக்டாக் மோகம் பிடித்து ஆட்ட பெரிய அந்தஸ்த்தில் பல ஆயிரக்கணக்கான காவலர்களை வழி நடத்தும் துணை ஆணையர் ஒருவரே சினிமா பாடலுக்கு வாயசைத்து நடித்து காணொளி வெளியிட்டு வருவது அதிகாரிகளிடையே முகச்சுளிப்பையும், காவலர்களிடையே விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

சென்னை மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையராக இருப்பவர் சோம சுந்தரம். இவருக்கு அலுவலகம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உள்ளது. இவர் தனது பணி நேரத்தில் சீருடையுடன் சினிமா பாடல்களுக்கு வாயசைத்து அந்த காணொளியை டிக்டாக் ஆப்பில் ஏற்றியுள்ளார். மோகன் அமலா பாடும் மெல்லத்திறந்தது கதவு படப்பாடலை அவர் கதாநாயகன் போல் பாடலுக்கு வாயசைத்து 14 நொடிகள் செல்லும் காணொளியை பதிவேற்றியுள்ளார்.

இதற்கு 15000 லைக்குககளும், 2500 ரசிகர்களும் உள்ளனர்.  அவரது பதிவு பக்கத்தில் இதுபோன்று 40-க்கும் மேற்பட்ட காணொளிகளை ஏற்றியுள்ளாராம்.  இது வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்கள் கடுமையான பணிச்சுமையில் நேரமின்றி சுற்றிவர ஆயுதப்படை துணை ஆணையருக்கு பாட்டுப்பாடி டிக்டாக்கில் வெளியிடும் அளவுக்கு நேரம் இருக்கிறது என்று காவலர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

சீருடையுடன் அவர் காணொளி வெளியிட்டது போலீஸார் மத்தியில் விமர்சனமாக வைக்கப்படுகிறது. இதேப்போன்று சாதாரண காவலர் சீருடையில் காணொளி வெளியிட்டால் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் அல்லவா, ஒரு துணை ஆணையரே இப்படி காணொளி வெளியிட்டால் நாமும் வெளியிடலாம் என காவலர்கள் கிளம்பினால் அதுவும் தவறான முன்னுதரணம் ஆகிவிடும் அல்லவா? என்கிற கேள்வியும் காவலர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x