

இரவு 8 மணி நேர நிலவரப்படி 'கஜா' புயல் நாகைக்கு 125 கி.மீ. தொலைவில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''125 கி.மீ. தொலைவில் காரைக்காலுக்கு கிழக்கே உள்ளது. கண்பரப்பு விட்டம் 26 கி.மீ. அளவில் உள்ளது. நாகையை நோக்கி மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் இது தீவிரப் புயலாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
வெளிப்பகுதி கரையைத் தொட்டுள்ளது. இது கடக்கும் நிகழ்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக இருக்கும். முன்பகுதி, கண்பகுதி, பின் பகுதி என மூன்று நிலைகள் கரையைக் கடக்கும்.
'கஜா' புயல் கரையைக் கடக்க நள்ளிரவு ஆகிவிடும். நகரும் வேகம் குறைவாக உள்ளதால் கடக்கும் வேகம் 3 முதல் 4 மணி நேரமாக இருக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.