

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, 'சிம்மக் குரலோன் 90' நினைவுத் திருவிழாவை 'இந்து தமிழ்' நாளிதழ் சென்னையில் இன்று நடத்துகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாள் கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 'இந்து தமிழ்' நாளிதழின் 'இந்து டாக்கீஸ்' இணைப்பிதழில் கடந்த சில வாரங்களாக சிவாஜி கணேசன் பற்றிய அரிய செய்தித் தொகுப்புகள், புகைப்படங்கள், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பற்றிய அலசல் கட்டுரைகள் என சிறப்பு பகுதிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வாசகர்களுக்கு சிவாஜியின் திரைப் படங்கள் தொடர்பாக அறிவுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் 50 வாசகர்கள் வெற்றி யாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான 'சிம்மக் குரலோன் 90' நினைவுத் திருவிழாவை 'இந்து தமிழ்' நாளிதழ் சென்னையில் இன்று நடத்துகிறது. தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மகால் அரங்கில் இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்பி.முத்துராமன், ‘சித்ராலயா’ கோபு, சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற சாரதா, 'வெண்ணிற ஆடை' நிர்மலா, குமாரி சச்சு, சிவாஜியின் கலை வாரிசுகளான ராம்குமார், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடனான தங்களது கலையுலக அனுபவங்கள், நினைவுகள் குறித்து உரையாற்றுகின்றனர்.
'இந்து டாக்கீஸ்' நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற 50 வாசகர்களுக்கான பரிசளிப்பும் இந்த விழாவில் நடக்க இருக்கிறது.
விழாவில் மேலும் ஒரு முக்கிய அம்சமாக, 'இந்து தமிழ்' நாளிதழ் தயாரித்திருக்கும் சிவாஜி பற்றிய சிறப்புக் காணொலி, நிகழ்ச்சியின் இறுதியில் திரையிடப்படுகிறது.