

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமம் புயலால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக முடங்கிக் கிடந்தது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்தக் கிராமத்துக்கு குடிநீர், மருத்துவ முகாம் உள்ளிட்ட வசதிகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டன.
எல்.என்.புரம் (அணவயல்) ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கிரன் குண்டு கிராமத்தில் 70 குடும்பங் கள் உள்ளன. புயலால் இந்தக் கிராமத்தில் அனைத்து வீடுகளும் முழுமையாகச் சேதம் அடைந்தன. துணிமணிகள், பாத்திரங்கள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத தால், கழிவுகள் சேர்ந்த குளத்தின் தண்ணீரையே கிராமத்தனர் குடி நீராகப் பயன்படுத்தி வந்தனர். இதனால், பலர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
தன்னார்வலர்களின் சில நிவாரண பொருட்களைத் தவிர, அரசு உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளி யானது. இதைத் தொடர்ந்து எல்.என்.புரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஜெனரேட்டர் கொண்டு வந்து அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அரசு மருத்துவ முகாம்
சுகாதார பணியாளர்கள் மூலம் கிராமத்தில் ஆங்காங்கே குவிந்தி ருந்த குப்பை அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. அறந்தாங்கி சுகாதார துணை இயக்குநர் கலைவாணியின் உத்த ரவின்பேரில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
கைகொடுக்கும் தன்னார்வலர்கள்
‘இந்து தமிழ்’ செய்தி யால் இக்கிராமத்தின் நிலையை அறிந்த மனித நேயமிக்க ஒரு சிலர் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். மேலும் பலர் பல் வேறு உதவிகளை செய்துதர இசைந்துள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த சுக்கிரன்குண்டு கிராம மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.