

சென்னையில் உள்ள 4 வட்டங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அந்தந்த பகுதிக்கான மின் கட்டணம் மட்டுமின்றி, மற்ற பகுதிகளுக்கான மின் கட்டணமும் இணையதளம் மூலம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை, தெற்கு மண்டலத்தின் தெற்கு வட்டத்தில் மின் கட்டண மையங்களில் வாடிக்கையாளர் கள் பணம் கட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை முதலே மின் கட்டண வசூல் மையங்களில், இணையதள செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டதால், வசூல் பணிகள் தாமதமாகின.
நண்பகலுக்கு மேல், மற்ற வட்டங்கள் மற்றும் மற்ற பிரிவு களை இணைக்கும் சர்வர் செயலிழந்ததால், வாடிக்கை யாளர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். கிண்டி, அடையாறு, வேளச்சேரி, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், தாம்பரம், மேட வாக்கம், பெருங்குடி, பல்லாவரம் என பல பகுதிகளிலுள்ள மின் கட்டண வசூல் மையங்களில் வசூல் பாதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பிரிவு அலுவலகமாக, மின் கட்டணம் செலுத்த அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, மின்துறை அதி காரிகளிடம் கேட்டபோது கூறிய தாவது:
பி.எஸ்.என்.எல். இணையதள இணைப்பில் ஏற்பட்ட கோளாறால், இந்த பிரச்சினை ஏற்பட்டது. மெயின் சர்வரில் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொண்டுள்ளதால், இந்த பாதிப்பு ஏற்பட்டதாக, பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவித்துள்ளனர். புதன் கிழமை நிலைமை சரியாகிவிடும்.
இவ்வாறு தெரிவித்தனர்.