Published : 18 Nov 2018 10:19 AM
Last Updated : 18 Nov 2018 10:19 AM

‘கஜா ‘புயலால் சேதமான பள்ளிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

‘கஜா' புயலால் நாகப்பட்டினத்தில் 136 நடுநிலைப்பள்ளிகள் சேதமாகி யுள்ளன, என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. ஆட்சியர் கதிரவன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘கஜா' புயலால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் சேதம் ஏற்படும் என்று விவரங்கள் கொடுத்தவுடனேயே முதல்வர் அனைத்து ஆயத்த பணிகளையும் செய்தார். இதை இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டியுள்ளனர். ‘கஜா' புயல் வேகத்தைக் காட்டிலும் அரசின் பணிகள் வேகமாக நடந்து உள்ளது.நேற்றைய தினம் எந்தெந்த மாவட்டங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரியவந்ததோ அந்தந்த மாவட்ட பள்ளிகளில் அதாவது சுமார் 24 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புயலால் பள்ளியில் ஏற்பட்ட சேதம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நாகப் பட்டினத்தில் 136 நடுநிலைப் பள்ளிகள் சேதமாகியுள்ளன. இன்னும் முழுமையான விவரங்கள் வரவில்லை.

அந்த விவரங்கள் வந்தவுடன் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் படும். வரும் ஜனவரி மாதத்தில் நடுநிலைப்பள்ளிகளில் 52 ஆயிரத்து 432 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக லண்டன், ஜெர்மன் போன்ற நாடுகளிலிருந்து 120 பேராசிரியர்கள் வருகின்றனர், என்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிர மணி, ராஜாகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x