

நாகர்கோவில்
சபரிமலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் குமரியில் நேற்று நடந்த முழு அடைப்பின்போது 13 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
குமரியில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நிலக்கல் பகுதியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள், அமைச்சரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவத்தைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்த் அறிவிப்பு வெளியான நேற்று முன்தினம் இரவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன.
நேற்று காலை 8 மணி வரை, நாகர்கோவிலில் இருந்து நெல்லை, தூத்துக்குடி உட்பட வெளி மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் பெரிதும் அவதிக்குள்ளாயினர். காலை 8 மணிக்கு பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. கேரளாவுக்கு பேருந்து சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. மாவட்டத்தில் 60 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தேர்வுகள் ரத்து
பந்த் காரணமாக, குமரி மாவட்டத்தில் நேற்று நடக்கவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்தார். மாவட்டம் முழுவதும் 12 அரசு பேருந்துகள், ஒரு தனியார் பேருந்து என 13 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டன.