

காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் சாலையோரத்தில் விழுந்தன. இதனால் பல இடங்களில் சாலையோர கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது. சாய்ந்த மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் திடீரென கனமழை பெய்தது. அப்போது பல பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பகுதியில் மரங்கள், கிளைகள் விழுந்து அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் அதிக அளவில் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
அப்போது புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திருநள்ளாறு பகுதியில் காரில் சென்றார். அப்போது நகரப் பகுதியில் சாலையில் அதிகமாக தண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்த அவர், திடீரென காரைவிட்டு இறங்கினார்.
தொடர்ந்து தம்முடன் வந்த காங்கிரஸ் கட்சியினருடன், கழிவுநீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்பகுதி வழியாக சென்ற கோட்டுச்சேரி கொம்யூன் பஞ் சாயத்து ஆணையர் செல்வமும், அமைச்சரின் செயலைப் பார்த்து தாமும் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டார். தகவலறிந்து திரு நள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரத்தில் சாலையில் தேங்கியிருந்த நீர் வடிந்தது. தம்முடன் பணியில் ஈடுபட்டோருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். இது போன்ற அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.