Published : 22 Nov 2018 05:08 PM
Last Updated : 22 Nov 2018 05:08 PM

சாலைகளில் கிராமிய நடனங்கள் ஆடியபடி ‘கஜா’ நிவாரண நிதி வசூல்: டெல்டா மாவட்டங்களுக்கு கைகொடுத்த நாட்டுப்புற கலைஞர்கள்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்காக மதுரையில் நாட்டுப்புற கலைஞர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பரங்குன்றம் வரை சென்று வீதிகள், சாலைகளில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்கள் ஆடியப்படியே நூதனமுறையில் நிதி திரட்டியது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமில்லாது புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மக்கள், வீடு, உடமைகளை இழந்துள்ளனர். இந்த மாவட்டங்களில் மின் கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்து மின்தடை தற்போது வரை நீடிக்கிறது. உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

மதுரையில் அழகர் கோயில், வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் விவசாயப்பயிர்கள், மரங்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் சாலைகளும், மலைக்கிராமங்களுடைய மின் கட்டமைப்பு வசதிகளும், வீடுகளும், விவசாய பயிர்களும் சேதமடைந்தன. தற்போது வரை ‘கஜா’ புயலின் தாக்கத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களும்,  கொடைக்கானலும் மீளமுடியவில்லை. சுனாமிக்கு அப்புறம், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது. 

தற்போது தமிழகம் மட்டுமில்லாது அன்டை மாநில மக்களும், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்கள், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக உணவு, ஆடைகள், மளிகைப்பொருட்கள், பால், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேரடியாக சென்றும், அனுப்பி வைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று காலை முக்கிய சாலைகள், வீதிகளில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களை ஆடியப்படியே பொதுமக்கள், வியாபாரிகளிடம் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி திரட்டினர்.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த நிதி சேகரிப்பு பிரச்சாரத்தில்  60க்கும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், வீதிகள், சாலைகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியப்படியே நிதி வசூல் செய்தனர். நாட்டுப்புற கலைஞர்கள், போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிவந்தாலும் இந்த கஷ்டத்திலும் தங்களுடைய கலைதிறமையை பயன்படுத்தி டெல்டா மாவட்ட மக்களுக்கு ‘கை’கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து தமிழக நாட்டுப்பற இசைக்கலைஞர்கள் பெருமன்றம் தலைவர் சே.தமிழ் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் இணைந்து தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு நிதியாகவும், நிவாரணப்பொருட்களாகவும் வழங்கிட இந்த கலைப்பிரச்சாரத்தை தொடங்கினோம். இதில், பறையாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை, நையாண்டி மேளம், சிலம்பாட்டம் ஆடியப்படியும், நாட்டுப்புற பாடல்களையும் பாடியபடியும் சென்று மக்களிடம் நிதி திரட்டினோம்.

எங்களுடன் நாட்டுப்புறவியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு நிதி திரட்ட உதவினர். நாங்கள் சேகரித்த இந்த நிதியையும், பொருட்களையும் டெல்டா மாவட்டங்களுக்கு  சென்று வழங்க உள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x