Published : 02 Nov 2018 09:00 AM
Last Updated : 02 Nov 2018 09:00 AM

பெயர்ப் பலகையில் தமிழில் எழுதப்பட்டதில் பிழை இருந்தது உண்மைதான்: படேல் சிலை குறித்து அமைச்சர் கே. பாண்டியராஜன் விளக்கம்

குஜராத்தில் திறக்கப்பட்டுள்ள படேல் சிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ‘Statue of Unity' என்று தமிழில் எழுதப்பட்டதில்  பிழை இருந்தது உண்மைதான் என  சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை பிரதமர்  சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை நதிக் கரையில் 597 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (அக். 31) திறந்து வைத்தார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரிந்து கிடந்த  சமஸ்தானங்களை இணைத்தவர் என்பதால் படேல் சிலைக்கு ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகையில் பல்வேறு மொழிகளில் 'Statue Of Unity' என எழுதப்பட்டிருந்தது. இதனை தமிழில் 'ஒற்றுமையின் சிலை' என எழுதியிருக்க வேண்டும். ஆனால், தமிழில் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என பிழையாக இருந்துள்ளது. இந்த செய்தி படத்துடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலகின் மிகப்பெரிய சிலை திறப்பு விழாவில் இதுபோன்ற மிகப்பெரிய தவறு நடந்திருப்பது மிகுந்த மன வேதனையை அளிப்பதாக ஒளவை நடராசன், மு.ராசேந்திரன் போன்ற தமிழறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

''தமிழில் தவறாக எழுதப்பட்டது  தொடர்பாக வெளியான படம் போலியானது. அப்படி எந்த பெயர்ப் பலகையும் படேல் சிலை உள்ள பகுதியில் வைக்கப்படவில்லை'' என குஜராத் அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியானது. இதனால் எது உண்மை என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் 'இந்து தமிழ்' நாளிதழிடம் நேற்று கூறியதாவது:

படேல் சிலை வளாகத்தில் ‘Statue Of Unity’  என்பதை 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என எழுதப்பட்டிருக்கும்  செய்தி அறிந்ததும் இது தொடர்பாக சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் தலைவரிடம் பேசினேன். தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதில்  பிழை இருந்தது உண்மைதான் என அவர் தெரிவித்தார். இந்த பெயர்ப் பலகை படேல் சிலை உள்ள பகுதியில் இருந்து தொலைவில் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வைத்திருக்கிறார்கள். இந்தப் பணியை மேற்கொண்ட குழுவில் தமிழர்கள் பலர் இருந்தும் இதுபோன்ற தவறு நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

கடந்த 30-ம் தேதி வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மட்டுமல்லாது 3 மொழிகளில் பிழை இருந்துள்ளது. இதனை அறிந்ததும் வைத்த ஒரு மணி நேரத்துக்குள் அதனை அகற்றி விட்டார்கள். ஆனாலும் இதனை ஒரு பத்திரிகையாளர் படம் எடுத்து விட்டதால் பரவிவிட்டது.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் படேல் சிலை வளாகம் முழுவதையும் தேசிய பாதுகாப்பு படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இதனால் தவறைத்  திருத்தி புதிய பலகையை வைக்க தனியார் கட்டுமான நிறுவனத்தால் முடியவில்லை. நடந்தது இதுதான்.

படேல் சிலை வளாகத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் அனைத்து மாநில கலாசாரத்தையும் பறைசாற்றும் அரங்குகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கே.பாண்டியராஜன் கூறினார்.

குஜராத் அதிகாரி விளக்கம்

இப்பிரச்சினை தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில், குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவரைத்  தொடர்பு கொண்டு கேட்டபோது,

“பெயர்ப்பலகையில் தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பது  உண்மை தான். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தோம். அவர்கள் தவறாக எழுதிவிட்டனர். இந்தத்  தவறை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததும் பெயர்ப்பலகையை மறைத்துவிட்டோம். தமிழ்மொழியில் சரியாக எழுதப்பட்டு  விரைவில் புதிய பெயர்ப்பலகை வைக்கப்படும்’' என்று தெரிவித்துள்ளார்.

தவறாக எழுதப்பட்டதால் அகற்றப்பட்டது

குஜராத்தில் சர்தார் வல்லபபாய் பட்டேலின் சிலை அமைக்கப்பட்ட பகுதியில் இருந்த பெயர் பலகை மீது நேற்று சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதில் தமிழ் தவறாக எழுதப்பட்டதால் அப்பலகை அகற்றப்பட்டதாக குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை சார்பில் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தெரிவிக்கப்பட்டது.

பலகை மீதான சர்ச்சை கிளம்பியவுடன் டெல்லியில் உள்ள குஜராத் பவனின் உள்ளுரை ஆணையர் விமலாவிடம் ‘இந்து தமிழ்’ தொடர்பு கொண்டது. ஐஏஎஸ் அதிகாரியான அவரது உதவியால் குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறையினர் விளக்கம் அளித்தனர்.

அந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தில் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறையினர் கூறும்போது, ‘‘தி ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ (The Statue of Unity) என்ற ஆங்கில வாசகம் சர்வதேச மற்றும் இந்திய என பத்து மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. இதில், தமிழின் வாசகம் தவறானது என சில பார்வையாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டவுடன் அந்தப் பலகையை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டது. சரியாக தமிழ் தெரியாதவர்களிடம் கொடுத்து  எழுதப்பட்டதில் இந்த தவறு நேர்ந்திருக்கலாம். இது சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் அமைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

இந்தப் பலகை பட்டேல் சிலைக்கு சுமார் 2 கிமீ தொலைவில் முன்னதாக அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x