

திருவள்ளூர் அருகே உள்ள தனியார் ரசாயனத் தொழிற்சாலை கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில் தீயில் கருகித் தொழிலாளி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் தனியார் ரசாயனத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உபயோகமற்ற டயர் மற்றும் வீணாகும் ரப்பர் பொருட்கள் மூலம் பர்னஸ் ஆயில்மற்றும் சிட்ரி ஆஸிட் உள்ளிட்டவைதயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் 50-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பர்னஸ் ஆயில் தயாரிக்கும் கொதிகலன் ஒன்றின் பகுதியில், புட்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(35) மற்றும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் (37), ஜோதிராம் (35) ஆகிய 3 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிக வெப்பம் காரணமாகக் கொதிகலன் மூடி திடீரென வெடித்துச் சிதறியது. இதில் ஏற்பட்டதீ பணியில் இருந்த ராஜேந்திரன் மீது பற்றியது. இதில் அவர் அதே இடத்திலேயே உடல் கருகி பலியானார். மற்ற இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில் அருகில் இருந்த கட்டிடப்பகுதி உள்பட நூறு மீட்டர் சுற்றளவுக்குத் தீ பரவியது. இதுபற்றித் தகவல் அறிந்த திருவள்ளூர், திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், கொதிகலன் அருகே உள்ள மின் இணைப்பு சாதனங்கள், கட்டிடத்தின் சுவர் பகுதிகள் எரிந்து நாசமாயின.
விபத்து குறித்துத் திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.