Last Updated : 15 Nov, 2018 08:04 PM

 

Published : 15 Nov 2018 08:04 PM
Last Updated : 15 Nov 2018 08:04 PM

கஜா புயலைச் சமாளிக்க கடல் ஓசை சமுதாய வானொலி கைகோப்பு

'கஜா' புயல் அறிவிப்பினைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க பாம்பனில் இயங்கும் கடல் ஓசை சமுதாய வானொலி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் உலகிலேயே முதன்முறையாக மீனவர்களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையம் கடல் ஓசை என்ற பெயரில் பாம்பனில் அமைக்கப்பட்டு 90.4 என்ற அலைவரிசையில் கடந்த 15.08.2016 முதல் இயங்கி வருகிறது.

கடல் ஓசை சமுதாய வானொலியின் மூலம் மீன்பிடிப்புக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்துக் காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன? கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த குறித்த தகவல்களை உடனுக்குடன் கடல் ஓசை சமுதாய வானொலி மூலம் ஒலிபரப்பப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில் 'கஜா' புயல் கரை கடப்பது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடல் ஓசை வானோலி நிலையம் பணியாற்றி வருகிறது.

இது குறித்து கடல் ஓசை வானொலியின் நிறுவனர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறுகையில்,  ''ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்திப் பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடல் ஓசை சமுதாய வானொலி மூலம் தகவல்  கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக சொந்த இடங்களுக்கு திரும்பி விட்டனர்.

'கஜா' புயல் கரை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள். குறிப்பாக பலத்த காற்று வீசும் நேரத்தில் வெளியிடங்களுக்குச் செல்லுதல், பயணங்கள் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும்.  வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் தாழிட்ட நிலையில் வைத்திட வேண்டும்.  மரத்தடியில் வாகனங்களை நிறுத்துதல், கால்நடைகளைக் கட்டுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். உணவுப்பொருட்கள், மருந்து மாத்திரைகள், கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைத்திடல் வேண்டும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் அறிவுரைகளை வானொலி மூலம் கிடைக்கும் என்பதால் பொது மக்களுக்கு புயல் நேரங்களில் வானொலிகளின் பயன் இன்றியமையாதது. இதன் மூலம்  அதிகாரபூர்வமற்ற வதந்திகள் தவிர்க்கப்டுகிறது'' என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 'கஜா' புயல், கரையைக் கடக்கும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ராமநாதபுரம், திருப்பாலைக்குடி மற்றும் மண்டபம் ஆகிய மூன்று இடங்களில்  ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x