Published : 19 Nov 2018 12:25 PM
Last Updated : 19 Nov 2018 12:25 PM

சோகத்திலும் நெகிழ்ச்சி: நிவாரணப் பொருட்கள் அனுப்பிய மாணவர்களுக்கு இளநீர் அனுப்பிய டெல்டா விவசாயிகள்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகள் சோகமான நிலையிலும், 'நாங்கள் உணவளிப்பவர்கள்'  என்பதை நிரூபித்துள்ளனர்.

'கஜா' புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

ஒட்டுமொத்த தமிழகத்துக்கே உணவு ஆதாரமாக விளங்கும் டெல்டா இப்படி உருக்குலைந்துள்ள வேளையிலும், டெல்டா விவசாயிகள் தங்களுடைய அன்பையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்தி நெகிழ வைத்துள்ளனர்.

'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி திருச்சி நேஷனல் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட வாகனத்தை வெறும் வண்டியாக அனுப்ப மனமில்லாத டெல்டா விவசாயிகள், அந்த வாகனம் முழுக்க இளநீர் நிரப்பி மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நாடியம் கிராமத்தில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும், டெல்டா விவசாயிகள் உணவளிப்பவர்கள் என்று நிரூபிக்கும் இச்சம்பவத்தை நெட்டிசன்கள் பாராட்டி நெகிழ்ந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x