Published : 19 Nov 2018 11:11 AM
Last Updated : 19 Nov 2018 11:11 AM

கஜா புயல்; ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவித்தது திமுக: எம்எல்ஏ - எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும் என அறிவிப்பு

'கஜா' புயல் நிவாரண நிதியாக திமுக ரூ.1 கோடி அறிவித்துள்ளது.

'கஜா' புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு, உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளால் அம்மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த கால பேரிடர்களில் இருந்து அதிமுக அரசு எவ்வித பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், 'கஜா' புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "'கஜா' புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாயும், சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x