

சென்னை
எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சியை அனுப்பிய ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கடந்த 17-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து வந்த விரைவு ரயிலில், முறையாக பதப்படுத்தப்படாத 2 ஆயிரம் கிலோ இறைச்சி 21 பார்சல்களில் இருந்தது தெரியவந்தது. இறைச்சியின் தன்மை, எலும்புகள் மற்றும் வாலின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவை நாய் இறைச்சி யாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
மேலும், இறைச்சிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததால், அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி, குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.
இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அவை ஆட்டின் இறைச்சி என்பது உறுதி செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு
கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியது, பார்சல்களில் மீன் என்று எழுதியது தொடர்பாகவும் இவற்றை ரயில்வே அதிகாரிகள் மற்றும் பார்சல் ஊழியர்கள் சோதனை செய்யாதது தொடர் பாகவும் சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியது தொடர்பாக பார்சல் புக்கிங் ஏஜென்ட் கணேசன் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் மீது ரயில்வே சட்டம் 163, 145 பி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டது.
அதிகாரிகள் சோதித்தார்களா?
இதையடுத்து ஜோத்பூர் விரைந்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார், அங்கிருந்து இறைச்சியை அனுப் பிய உஸ்மான் என்பவருக்கு எழும்பூர் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அளித்தனர். மேலும் ஜோத்பூரில் இறைச்சி பார்சலை பதிவு செய்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதனை திறந்து பார்த்து சோதித்தார்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை விவரங்களை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.