

கஜா புயல் பாதித்த மக்களை நேரில் சென்று சந்தித்தால் அவர்கள் துயரம் தெரியும் என ஹெலிகாப்டரில் சென்று பாதியில் திரும்பிய முதல்வருக்கு கமல்ஹாசன் யோசனை வழங்கியுள்ளார்.
கஜா புயல் கரையைக் கடந்ததால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களும் 30 ஆண்டுகளில் சந்தித்திராத பேரழிவைச் சந்தித்தன.
புயலுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அரசு புயலுக்குப் பின் நடவடிக்கை எடுக்கவில்லை. 7 நாட்களாகியும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட போய் சேரவில்லை என்கிற விமர்சனம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மின்சாரம் இன்றி மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி இன்றி இருளில் மூழ்கிக்கிடக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றுவரை நிவாரண உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் மன உளைச்சலில் உள்ளதாக டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளை மூன்று நாட்களுக்குப் பின்னர் ஹெலிகாப்டரில் சென்று பார்த்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் வானிலையைக்காரணம் காட்டி பாதியிலேயே திரும்பினர். பல பகுதிகளில் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் வானில் சென்று பார்வையிட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். ''ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததாக முதல்வரே ஒப்புக்கொள்கிறார். எனவே, ஐந்து நாட்களாக அமைச்சர்கள் தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் திடீரென்று ஹெலிகாப்டர் எடுத்து சுற்றிப்பார்த்து விட்டு ஐந்து மணி நேரத்தில் ஆய்வு நடத்தி முடித்துவிட்டு சென்று பிரதமரிடம் சொல்லியிருக்கிறாரா? இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, நம்ப முடியவில்லை'' என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், முதல்வர் பழனிசாமியை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். மக்களோடு மக்களாக நின்றால் சோகம் தெரியும் தரையில் சென்று ஆய்வு நடத்துங்கள் என கமல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோன்று மறியலில் ஈடுபட்ட மக்களின் பெருந்தன்மை குறித்தும் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
“அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள் கோபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்பட வைத்தது.
இவர்களா ஏழைகள்? பெருந்தன்மை செல்வந்தர்கள்'' என பெருமிதத்துடன் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.