

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாகவும், இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும்போது ஒரு சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை கொட்டித் தீர்க்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்தப் புயல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
புயல் நிலவரம் தொடர்பாக இந்தியா வானிலை ஆய்வு மையம் பிற்பகல் 2 மணி நிலவரத்தை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
''வங்கக் கடலில் உருவாகிய ‘கஜா’ புயல் தற்போது வேகமாக நகர்ந்து வருகிறது. 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 6 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறும். நாகைக்கு வடகிழக்கே 240 கி.மீ. தொலைவில் ‘கஜா’ புயல் உள்ளது.
‘கஜா’ புயல் இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் அந்தப் பகுதியில் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புயல் கடந்து செல்லும் பாதையில் பலத்த காற்றுடன் மிக கனமழை இருக்கும்.
நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 செ.மீ. அளவுக்கு மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்''.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.