Published : 29 Nov 2018 04:10 PM
Last Updated : 29 Nov 2018 04:10 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை; அதிமுக அரசின் மெத்தனமே காரணம்: தினகரன் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயக் குழு ஆய்வறிக்கை அளித்ததற்கு அதிமுக அரசின் மெத்தனமே காரணம் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.

நிபுணர் குழு அளித்த பரிந்துரையில், ஆலையை மூடுமாறு தமிழக அரசின் உத்தரவில் அளிக்கப்பட்டுள்ள காரணங்கள் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு எந்த வகையிலும் உகந்ததாக இல்லை என்றும், இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டுமென்று தீர்ப்பாயம் கருதும் பட்சத்தில், நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. இது தமிழக அரசிற்கு மிகப்பெரிய பின்னடைவு.

தூத்துக்குடி மாவட்டத்தையே நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மிகவும் பலவீனமான வழிமுறையைக் கையாண்ட தமிழக அரசின் நடவடிக்கையே, நிபுணர் குழு இந்த அறிக்கை தருவதற்கான முழு காரணம். தூத்துக்குடி மக்களையும், சமூக ஆர்வலர்களையும், பொதுமக்களையும் நூறு நாட்கள் போராட வைத்து, இறுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை பலிகொண்டு, நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்திய இந்த அரசு, இப்போராட்டமானது தூண்டிவிடப்பட்டதாகவும், இதில் சமூக விரோதிகளும், பயங்கரவாதிகளும் ஊடுருவியுள்ளதாகவும் கூறி அப்பாவி மக்களை கைது செய்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கும் புனையப்பட்டது.

இதனிடையே, வேறு வழியின்றி அரைமனதுடன் சில பலவீனமான நடவடிக்கைகளை எடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டோம் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மொத்த நடவடிக்கைகளும் மக்களை ஏமாற்றிய ஒரு தந்திரச் செயல் என்று தற்போது நிரூபணமாகி உள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக ஓர் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டபோதே, இது தவறான நடைமுறை; நீதிமன்றத்தில் இந்த அரசாணை எடுபடாது எனவும், ஆகவே காற்றை நஞ்சாக்கும் தாமிர ஆலைகள் தமிழகத்தில் இனி வேண்டாம் என சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென அப்போதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டியது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையும் இந்த அரசாணையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த விவகாரத்தில் உரிய கொள்கை முடிவு எடுக்கும்படி சொன்ன பிறகும், இந்த அரசு மெத்தனம் காட்டியதன் விளைவுதான் இன்றைய இந்த சூழலுக்குக் காரணம்.

தூத்துக்குடியையே நஞ்சாக்கிய வேதாந்தா குழுமத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் எடுக்கும் உரிமத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை தீவிரமாக எடுத்துச் செல்லாது என்கிற குரல் தான் தமிழகத்தின் எட்டுத் திக்கும் ஒலிக்கிறது.

மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தாலும், அதன் சாதக பாதகங்களை சிந்திக்காமல் தமிழக விரோத போக்கை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் இந்த அரசு நடந்துகொள்ளும் முறை.

இப்படி தொடர்ந்து அநியாயமாக தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும் தமிழக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

வேதாந்தா குழுமம் நாங்கள் ஆலையை இயக்கிவிடுவோம் என்று ஏற்கெனவே சொன்னதை நோக்கி தான் இந்த வழக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.

இதற்கு ஒரே தீர்வு தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி உடனடியாக எடுக்க வேண்டும். அதனைச் சட்டமாக்க வேண்டும்" என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x