

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நவ.15 அன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
“மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 790 கி.மீ. தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து வரும் நவ.15 அன்று பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி நவ. 15 காலைமுதல் புயல் கரையைக் கடக்கும் காலம் வரை தஞ்சை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பலத்தக் காற்றானது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். சமயங்களில் 100 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இந்த மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் வரும் 15-ம் தேதிவரை கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை 15,16,17 தேதிகளில் ஓரளவு மிதமான மழை இருக்கும். சென்னைக்கு நேரடியாக புயலால் பாதிப்பு இருக்காது. புயல் கரையைக் கடக்கும்போது அதை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கிழக்குத்திசை காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளதால் அதன் காரணமாக மழை பெய்யும்.
புயல் திசைமாறக்கூடிய வாய்ப்பு குறைவு, தொடர்ந்து கண்காணிக்கிறோம். கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த வேகத்தில் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.