Published : 13 Nov 2018 07:47 PM
Last Updated : 13 Nov 2018 07:47 PM

அடடா என்ன திறமை; போலீஸாரே வியந்த ’டிப்டாப்’ திருடன்: ஏடிஎம்மில் இப்படியும் உங்கள் பணம் பறிபோகலாம்

ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைத்திருப்பி பணத்தை அபேஸ் செய்துவந்த திருடனை பிடித்த போலீஸார், அந்த நபர் திருடிய விதத்தைப் பார்த்து வியந்துபோயுள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம்களில்  பணம் எடுப்பபவர்களின் பணம் திருடப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வங்கியிலிருந்தும், வாடிக்கையாளர்கள் சார்பாகவும், சென்ட்ரல் ரயில்வே போலீஸுக்கும், அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்திற்கும் அதிக அளவு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீஸார் புகார் கூறியவர்கள் பணம் எடுத்த நாட்களில் அந்தந்த ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து சோதனையிட்டனர். அப்போது அனைத்து சம்பவங்களில் ஒரு நபர் இருப்பது தெரியவந்தது. அனைத்து சம்பவங்களிலும் இந்த இளைஞர் எப்படி அங்கு இருக்கிறார் என்று குழப்பமடைந்த போலீஸார் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இளைஞர் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தினர்.

சிலர் எங்களுக்கு தெரியவில்லை, ஞாபகமில்லை என்று தெரிவித்தனர், சிலர் ஆமாம் சார் இவர்தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தார் என்று தெரிவித்தனர். சிலர் இவர்தான் சார் பணம் எடுக்கும்போது ஏடிஎம் மெஷின் வேலை செய்யவில்லை என்று கூறி பக்கத்து மெஷினில் எடுக்கச்சொன்னார் என்று தெரிவித்தனர்.

போலீஸார் அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்து சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் எடுக்கும்போது ஏதோ கூறுவதும், பின்னர் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டுச் செல்வதும் தெரியவந்தது.

போலீஸார் அந்த இளைஞரை பிடிக்க வலைவிரித்து காத்திருந்தனர். வழக்கம்போல் ஏடிஎம்மில் தனது கைவரிசையை காட்ட வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் சிக்கினார். அவரைப்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர்  கோபி கிருஷ்ணா என்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் கூறியது போலீஸாரை திடுக்கிட வைத்தது. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று சிரித்துக்கொண்டனர். ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை அவர்கள் அறியாமலே நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் எடுத்த அந்த நபர் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் விமானத்தில் சொந்த ஊருக்கு பறந்து விடுவாராம்.

எப்படி பணத்தை நூதன முறையில் ஏமாற்றி எடுப்பேன் என்பதை அந்த நபர் நடித்து காட்டியுள்ளார். டிப்டாப்பாக உடையணிந்து இரண்டு எந்திரங்கள் உள்ள ஏடிஎம்மில் சென்று நின்றுக்கொள்வார். பணம் எடுக்க வருபவர்கள் ஒரு எந்திரத்தில் கார்டை சொருகி வெளியே எடுத்தவுடன் இவர் அவசரமாக குறுக்கிட்டு சார் இந்த மெஷின் வேலை செய்யவில்லை அந்த மெஷினில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவார்.

பணம் எடுக்க வந்தவர் நன்றி கூறிவிட்டு அடுத்த எந்திரத்தில் கார்டை நுழைத்து பணம் எடுப்பார். இவர் அவர்கள் பதிவு செய்யும் சீக்ரெட் நம்பரை கவனித்து வைத்துக்கொண்டு டக்கென்று அந்த நம்பரை முதலில் கார்டை நுழைத்த எந்திரத்தில் அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை எடுத்துவிடுவார். இதில் பல நேரம் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். கணக்கில் கணிசமாக பணம் வைத்துள்ளவர்கள் பணத்தை அழகாக சுருட்டிவிடுவார்.

இப்படி செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பல ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பல வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் எடுப்பார். இப்படி கணிசமாக சேரும் பணத்தில் சொந்த ஊருக்கு விமானத்தில் சென்று வருவார். நூதனமான முறையில் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

பணம் எடுக்கும்போது அருகில் யாரையும் நிற்க அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் பணம் பறிபோக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர். நூதனமான முறையில் பணத்தை திருடிவந்த நபர்  பெரியமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x