

தமிழகத்திற்கு 'கஜா' புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய 'கஜா' புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த தென்னை மரங்கள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரிலான வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்ததால் பல கிராமங்கள் இன்றும் இருளில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
நிவாரணப் பணிகளுக்கு முதல்கட்டமாக மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உடனடியாக 1,000 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய், பாத்திரம், துணி வாங்க ரூ.3,800 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த பயிர்கள், தென்னை, வாழை மரங்கள், உயிரிழந்த கால்நடைகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை பார்வையிட்ட அவர், மழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமலேயே சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி வழங்கக் கோரியும், புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
'கஜா' புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு 15,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும், 'கஜா' புயல் பாதிப்பு இடங்களை மத்தியக் குழு நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனவும், முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
வர்தா, ஒக்கி புயல் நிவாரணத்தொகையில் உள்ள நிலுவையை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி மோடியிடம் கோரிக்கை விடுத்தார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
iஇந்தச் சந்திப்பின்போது, அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.