

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதன்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு நேரிட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எடமலைப்பட்டி புதூர் கோரையாற்றுக் கரையில் சுமார் 35 பேர் குடிசை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். இங்கு முருகன்(40) என்பவர் தனது மனைவி சித்ரா(35) மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பந்தல் தொழில் செய்துவரும் முருகன் கீற்று, மூங்கில்களை வீட்டுக்கு அருகில் வைத்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு முருகன் தனது மனைவி சித்ரா, மகள்கள் காவியப்பிரியா, தேவிப் பிரியா ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். புதன் கிழமை அதிகாலை 3 மணியள வில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. கதவுகளை உட்புறமாக தாழிட்டுக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த முருகனின் குடும்பத்தினரின் கதறலைக் கேட்டு, அக்கம்பக்கத் தினர் காப்பாற்ற முயன்றும் பலத்த காற்று வீசியதால் வீட்டுக்கு அருகில்கூட அவர்களால் நெருங்கவே முடியவில்லை. தீப்பற்றிய அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது..
தீ அணைந்தபின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சித்ரா தனது 4 வயது குழந்தையை கட்டிப் பிடித்தபடியும், முருகன் மற்றொரு குழந்தையை அணைத்தபடியும் கிடந்தனர். வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மாட்டுக்கொட்டகையும் எரிந்து நாசமானது. அதிலிருந்த மாடு ஒன்றும் இறந்துகிடந்தது.
முருகனின் மூத்த மகள் ஜனப்பிரியா(9) சற்று தொலைவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்ததால் தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.
தகவலறிந்த ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அடிப்படை வசதிகளற்ற ராஜீவ் காந்தி நகரை குடிசைப் பகுதியாக வகைப்படுத்த குடிசை மாற்று வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு வழங்கும் நிதி உதவியை வழங்கினால் கூட வீட்டுக்கு ஓடு போட்டு தீ விபத்தில் சிக்காமல் தற்காத்துக்கொள்ளலாம் என் கிறார்கள் அப்பகுதி மக்கள்.