Published : 18 Nov 2018 10:27 AM
Last Updated : 18 Nov 2018 10:27 AM

நிர்ணயித்தது 58,500 ஹெக்டேர்; நிறைவேறியது 946 ஹெக்டேர்: பிசான பருவ நெல் சாகுபடி இலக்கு எட்டப்படுமா?- பிற பயிர்களும் கேள்விக்குறி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் நெல் சாகுபடி இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டம் முழுக்க 58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 946 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கார், பிசானம், கோடை என்று 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெறும். அணைகளிலும், குளங்களிலும் நீர் இருப்பு திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் பிசான பருவத்தில் இலக்கைத் தாண்டி நெல் சாகுபடி நடைபெறும். இவ்வாண்டு பிசான பருவத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே நெல் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன.

இலக்கும்- இயல்பும்

மாவட்டம் முழுக்க பிசான பருவத்தில் 58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 946 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளதாக வேளாண் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலத்தில் பிசான பருவத்தில் 2,544 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றிருந்தது.

மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டு 15,700 ஹெக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 12,899 ஹெக்டே ரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. 36,000 ஹெக்டேரில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் 27,477 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. 4,000 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 2,440 ஹெக்டேர் இலக்கு எட்டப்பட்டிருக்கிறது.

5,500 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி இலக்கில் 2,806 ஹெக்டே ரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. 3,940 ஹெக்டேரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை 1,886 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2018-2019-ம் ஆண்டில் 1,38,140 ஹெக்டேரில் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 31.10.2018 வரை 66,889 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 23,764 ஹெக்டேரில் பல பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.

மழை அதிகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. கடந்த ஆண்டில் 1090.99 மி.மீ. மழை பெய்திருந்தது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம். இவ்வாண்டில் நடப்பு மாதம் வரை இயல்பான மழையளவு 703.2 மி.மீ. ஆனால், 941.47 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பைவிட 34 சதவீதம் அதிகம்.

குளங்கள் நிலவரம்

மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என்று, மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. அதில் 65 கால்வரத்து குளங்களில் 3 மாத மும், 292 குளங்களில் 2 மாதமும், 786 குளங்களில் 1 மாதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 78 கால்வரத்து குளங்கள் வறண்டுள்ளன.

மானாவாரி குளங்களில் 340-ல் 2 மாதமும், 867-ல் ஒரு மாதத்துக்கான தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 90 மானாவாரி குளங்கள் வறண்டிருக்கின்றன. மொத்தமாக மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 168 குளங்கள் வறண்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் 3 மணிநேரம் முதல் 5 மணி நேரத்துக்கு பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் உள்ளது.

நீர்மட்டம் ஒப்பீடு

மாவட்டத்திலுள்ள 11 அணைகளிலும் தற்போது 68 சதவீதம் தண்ணீர் இருப்பதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 49 சதவீதம் நீர் மட்டுமே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடி யாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளில் தண்ணீர் மொத்த கொள்ளளவு 13,771 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் 6,696 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீர் இருந்தது. தற்போது 9,358 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x