

வீடுகளிலும் தெருக்களிலும் நொச்சி செடி வளர்க்க விரும்புவோருக்கு செடிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொசுக்களை ஒழிப்பதற்காக 2013-ம் ஆண்டு முதல் நொச்சி செடிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் நொச்சி செடிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுநலச் சங்கங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் நொச்சிக் கன்றுகளை நடவும், பகுதிவாசிகளுக்கு இலவசமாக விநியோகிக்கவும் எத்தனை செடிகள் வேண்டும் என்று தெரிவித்தால், அவற்றை மாநகராட்சி இலவசமாக வழங்கும். இதர நலச் சங்கங்கள், அமைப்புகள், பொதுமக்களும் எத்தனை நொச்சி செடிகள் வேண்டும் என்று தெரிவிக்கலாம்.
இந்த செடிகளை வார்டு அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். மழைக் காலம் என்பதால் நொச்சி செடி வேகமாக வளரும். எனவே, தேவை பற்றிய விவரத்தை மக்கள் விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நொச்சி செடிகள் வேண்டுவோர் mayor@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 044 25619300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.