Published : 15 Nov 2018 06:17 PM
Last Updated : 15 Nov 2018 06:17 PM

வலுவடையும் கஜா புயல்: எப்படி இருக்கிறது மெரினா கடற்கரை?

'கஜா' புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே உள்ளது.

'கஜா' புயல் தற்போது நாகைக்கு வடகிழக்கே சுமார் 217 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதுதொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர் - பாம்பன் இடையே புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் போது, மணிக்கு 80-90 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்புயலால் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அதிக பாதிப்புகள் இருக்காது என வானிலை மையம் கூறியிருந்தாலும், கடலோர மாவட்டம் என்பதாலும், புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மழை பெய்யக்கூடும் என்பதாலும், சென்னை மெரினா கடற்கரையிலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட சற்று உயரமான அலைகள் இன்று மதியம் முதலே உருவாகியுள்ளன. மேலும், பலத்த காற்று கரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் கீழே விழுந்தும் காணப்பட்டன. வழக்கமாக காணப்படும் மக்கள் தொகையை விட குறைவாகவே பொதுமக்கள் உள்ள நிலையில், அவர்களை வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை அகற்றும் பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும், அலைகளின் முன்பு செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x