

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரேஸ் ஓட்டி மூன்று பேர் விபத்தில் காயமடையும் வகையில் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் நபர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
கடந்த 11-ம் தேதி இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பொன்ராஜ் பாண்டியன் என்பவர் தனது மகள் 7 வயது மகள் மற்றும் தனது தாயார் ஆனந்தி (69) ஆகியோருடன் கிண்டி கத்திப்பாரா அருகே சென்று கொண்டிருந்தார். கிண்டி பாலாஜி மருத்துவமனை எதிரில் சாலையில் வேகமாக ரேஸ் ஓட்டுவது போல் சுமார் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 20-க்கும் மேலானோர் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து வேகமாக சென்றவர்களில் ஒரு பைக் பொன்ராஜ் பாண்டியனின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பொன்ராஜ் பாண்டியனின் தாயாருக்கு தலை. இடுப்பு மற்றும் கை. கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு அருகிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.
அதிவேகமாகவும். சாலையில் தாறுமாறாகவும். வாகனத்தினை ஓட்டினால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்தே வேகமாக வானத்தினை ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொன்ராஜ் கொடுத்த புகாரினை பெற்று மவுண்ட் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவில் பிரிவு 279, 338, 308 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பைக்ரேசில் சென்று விபத்து ஏற்படுத்திய திருவள்ளு்ர் மாவட்டம், சோழாவரத்தைச் சேர்ந்த அருண் (எ) ரெட்ஹீல்ஸ் அருண் (23) ஏழுகிணற்றைச் சேர்ந்த ஹரி (24), எம்ஜிஆர் நகரைச்சேர்ந்த மோசஸ் (20). வியாசர்ப்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (22) நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), சோழவரத்தைச் சேர்ந்த தினேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. 6 பேர் புழல் மத்திய சிறையிலும். 17 வயது சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண் என்ற ரெட்ஹீல்ஸ் அருண் என்பவர் புழலிருந்து சோழவரம் பைபாஸ் சாலையில் மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் மெரினா, பெசன்ட்நகர். அடையார், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பைக் ரேஸ் என்ற பெயரில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளது தெரியவந்தது.
மேலும் அருண் மீது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பேட்டை. சிப்காட், கும்மிடிபூண்டி, சோழவரம், பெரியபாளையம் மற்றும் வெங்கல் ஆகிய காவல் நிலையங்களில் 2011-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சாலை விபத்தில் மரணம் ஏற்படுத்திய வழக்கு, திருட்டு வழக்குகள் 5. வழிப்பறி வழக்குகள் 6. கூட்டுக்கொள்ளை 1 மற்றும் கொலை முயற்சி வழக்கு1 உட்பட சுமார் 17 வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
ஆகவே. பைக் ரேஸ் என்ற பெயரில் அதிவேகமாகவும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களை நேரடியாக மற்றும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அவர்கள் மீது சட்டபூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.