

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. கொடியேற்றத்துக்கு பிறகு, 10 நாள் உற்சவம் நடைபெற்றது. சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் மற்றும் நாயன்மார்கள் மாட வீதியில் உலா வந்தனர். கடந்த 20-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.
“பஞ்ச பூதமும் நானே, நானே பஞ்ச பூதம்” என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், மூலவர் சன்னதி முன்பு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், பிரம்மதீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பரணி தீபத்துக்கு பிறகு, சாமி தரிசனம் செய்ய பே கோபுரத்தில் இருந்து திருவூடல் தெரு வழியாக இந்திர லிங்கம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
11 நாட்கள் தரிசிக்கலாம்
தங்க கொடிமரம் முன்பு உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த் திகள் எழுந்தருள, மாலை 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், பரணி தீபத்தின் மூலம் அகண்டத் தில் தீபம் ஏற்றப்பட்டதும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சி யில், நிலை நிறுத்தப்பட்டுள்ள கொப் பரையில் மகா தீபம் ஏற்றப்பட் டது. அப்போது, அண்ணாமலை யாருக்கு 'அரோகரா' என பக்தர்கள் முழக்கமிட்டனர். 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றப்படும். கோயில் மண்டபங்கள் மற்றும் கோபுரங்கள், சுவர்கள் ஆகியவை மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
22-ம் தேதி பவுர்ணமியும், 23-ம் தேதி மகா தீபத் திருவிழாவும் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 2 நாட்களாக கொட்டும் மழையில் பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில்கள், துர்க்கை அம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அண்ணாமலையார் கிரிவலம்
இதையடுத்து, ஐயங்குளத்தில், 3 நாள் தெப்பல் உற்சவம் இன்றிரவு தொடங்குகிறது. இன்று இரவு சந்திரசேகரர், நாளை இரவு பராசக்தி அம்மன், நாளை மறு நாள் இரவு முருகரின் தெப்பல் உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் பக்தர்களை போல், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நாளை (25-ம் தேதி) கிரிவலம் செல்ல உள்ளார். வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் வரும் 27-ம் தேதி இரவு நடைபெற்றதும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது.
மேகங்கள் திரண்டதால்..
நேற்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மேகங்கள் சூழ்ந்து இருந்ததால், மகா தீபம் தரிசனத்தை பக்தர்களால் உடனடியாக காண முடியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு பிறகு மகா தீபத்தின் ஒளியை மங்கலாக காண முடிந்தது. பின்னர், 9 நிமிடங்களுக்கு பிறகு ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி தந்தார். அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.