Published : 19 Nov 2018 04:24 PM
Last Updated : 19 Nov 2018 04:24 PM

கஜா புயல்: புறக்கணிக்கப்பட்ட பேராவூரணி தொகுதி: பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பு

'கஜா' புயல் தாக்கியதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேராவூரணியும் ஒன்று. ஆனால் நாகை, வேதாரண்யத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பேராவூரணிக்கு இல்லை என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

'கஜா' புயல் கடுமையாகத் தாக்கிய மாவட்டங்களில் நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் அடங்கும். நாகையில் வேதாரண்யம் பாதிக்கப்பட்டதுபோன்றே தஞ்சையில் பேராவூரணி சட்டப்பேரவைக்கு உட்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடந்ததில் நேரடியாகத் தாக்கிய அதிராம்பட்டினம் அருகே உள்ள பேராவூரணி தாலுகாவின் நான்கைந்து கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரசின் பார்வைக்கு கொண்டுவரப்படவே இல்லை. அப்பகுதி மக்களின் பிரதான தொழிலே விவசாயம், தென்னை மரங்கள். ஆனால் 'கஜா' புயலின் கடுமையான தாக்குதலால் தென்னை மரங்களில் 90 சதவீதம் வேரோடு சாய்ந்ததில் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த வியாழக்கிழமை தாக்கிய புயலின் கடுமை காரணமாக தாங்கள் அனைவரும் 30 ஆண்டுகள் பின் தங்கிவிட்டோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தென்னந்தோப்புதான் வாழ்வாதாரம், 30 ஆண்டுகள் கடந்த தென்னை மரங்கள் குடும்பத்துக்குச் சோறுபோட்டது. பிள்ளைகள் படிப்பு, திருமணம், தினசரி வருமானம் என அத்தனை கனவுகளையும் நொடிப்பொழுதில் அத்தனையையும் அழித்துவிட்டது 'கஜா' புயல் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பேராவூரணி தொகுதியை யாரும் கவனிக்கவில்லை. அனைவரும் வேதாரண்யத்தை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனர். ஆனால், பேராவூரணியில் ஒட்டங்காடு, சித்துக்காடு, களத்தூர், சேர்வாவிடுதி, களத்தூர், துறவிக்காடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் 4 மணி நேரம் புயல் கோரத்தாண்டவம் ஆடியதில் அப்பகுதி மக்களின் வீடுகள், தென்னந்தோப்புகள் விவசாயப் பகுதிகள் கடுமையாக அழிக்கப்பட்டது.

மின்சாரம் இல்லாமல், குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காமல், எந்தவித அரசு உதவியுமின்றி இப்பகுதி மக்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சில நல்ல உள்ளங்கள் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகித்தனர்.

ஆனாலும் அரசு முன்னெச்சரிக்கையில் காட்டிய வேகத்தை இப்பகுதியில் பாதிக்கப்பட்டபின் காட்டவில்லை என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கம். டெல்டா மாவட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விட்டார்களா? குடிக்கத் தண்ணீர் இல்லை, உண்ண உணவில்லை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை, நிவாரண முகாமில் மக்கள் என்று வாழ்ந்த இடத்திலேயே அகதிகள் போல் வாழும் நிலை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேராவூரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தராஜன் பாதிக்கப்பட்ட பகுதி பக்கமே வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் உதவி கைகொடுக்காத நிலையில் அங்குள்ள மக்களே தாங்களாக முன்வந்து மரங்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் படித்து வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் நிலையில் பாதிப்பை அறிந்து தங்கள் பகுதிக்குத் திரும்பியுள்ளனர். அதிராம்பட்டினம் அருகே புயல் கரையைக் கடந்ததால் அதற்கு அருகில் உள்ள ஒட்டங்காடு உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சொந்த ஊருக்குத் திரும்பிய இளைஞர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

 

சித்துக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் சொல்லும் தகவல் திடுக்கிட வைத்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 தென்னை மரங்களுக்கு மேல் உள்ள நிலையில் அனைத்தும் விழுந்ததால் பெரிய அளவில் நஷ்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அனைத்தும் காய்க்கும் பருவத்தில் இருந்தது. இதற்கு என்ன நிவாரணம் அளிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பின் தங்கிப்போய் விட்டோம் என்று தெரிவித்தார்.

அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தைச் சீரமைக்கவே மாதக்கணக்கில் ஆகும். பட்டுக்கோட்டை, பேராவூரணி இரண்டு தாலுக்காக்களில் பேராவூரணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் அடித்த நேரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் இறந்துபோன தகவலையும் தெரிவித்தார். இந்தப்பகுதி மக்களின் பிரச்சினை அரசின் கவனத்திற்குச் சென்று தீர்க்கப்பட்டால் அது அம்மக்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x