Published : 08 Nov 2018 03:32 PM
Last Updated : 08 Nov 2018 03:32 PM

மரணத்தின் தூதுவர் நடிகர் விஜய்; சிகரெட் காட்சிகள் திட்டமிட்டு சிறுவர்கள் மீது திணிப்பு: பசுமைத் தாயகம் குற்றச்சாட்டு

சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு பின்னர் சிகரெட் கம்பெனியின் வியாபார யுக்தி உள்ளது, நடிகர் விஜய் தனது இளம் ரசிகர்கள் மீது சிகரெட் பழக்கத்தைத் திணிக்கிறார் என பசுமைத் தாயகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் அருள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'' 'சர்கார்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகள் சிறுவர்கள் மீது சிகரெட் பழக்கத்தை திணிக்கும் திட்டமிட்ட சதி ஆகும்.

இந்தியாவில் புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 72% திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன. திரைப்படங்களில் வரும் காட்சியைப் பார்த்துதான் 53 விழுக்காட்டினர் புகைப்பிடிக்கக் கற்றுக் கொள்கின்றனர் என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது புகையிலைத் தீமையைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சிகரெட் நிறுவனங்களின் நேரடி விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் உறைகளின் மீது எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகளிலும் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.

இந்தச் சூழலில், திரைப்படங்கள் மூலமாக புகையிலை விளம்பரங்களைத் திணிக்கும் சதியில் சிகரெட் நிறுவங்கள் ஈடுபட்டுள்ளன. அந்தச் சதிக்கு நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் உடந்தையாகியுள்ளனர்.

'சர்கார்' திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி குறைந்தது 22 காட்சிகளில் (scenes) வருகிறது. ஒவ்வொரு காட்சியும் ஒரு விளம்பரமாக இருக்கிறது. அதாவது, நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் ஒரு நுட்பமான விளம்பரக் காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சிகரெட் பாக்கெட்டைத் திறப்பது, அதிலிருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைப்பது, புகையை விடுவது என அனைத்தும் நுட்பமாக அண்மைக் காட்சிகளாக (close-up) தயாரிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் நிறுவனங்களிடம் பணம் வாங்காமல், இத்தகைய சிகரெட் விளம்பரங்களை 'சர்கார்' படத்தில் திணித்திருக்க வேறு காரணம் எதுவும் இல்லை. படத்தின் கதைக்கும் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புகைப்பிடிக்கும் காட்சிகளைக் கவர்ச்சிகரமாக காட்ட வேண்டும் (Glamourisation) என்பது இக்காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.

மேலும், பொது இடங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் புகைப்பிடிப்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தின் நடுவே நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்று 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ளது. இது குற்றச்செயல் ஒன்றை சாதாரணமாக காட்ட முயலும் (Normalization) சிகரெட் நிறுவனங்களின் சதி ஆகும்.

படத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்கள் பெயரில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் பெரும்பாலானவை நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் படத்துடன் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, இப்படத்துக்கான முதல் விளம்பரம் (First look) புகைப்பிடிக்கும் காட்சியுடன் வெளியிடப்பட்டது. இவையெல்லாம் தற்செயலானவை அல்ல.

எனவே, சிகரெட் நிறுவங்களின் அப்பட்டமான விளம்பரம் 'சர்கார்' படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் இதற்காக சிகரெட் நிறுவங்களிடம் சட்டவிரோதமாக பணம் பெற்றிருப்பார்கள் என்பது உறுதி.

தனது வாடிக்கையாளர்களை தாமே திட்டமிட்டுக் கொலை செய்யும் ஒரே வியாபாரம் சிகரெட் விற்பனை தான். தொடர்ச்சியாக புகைப்பிடிப்போரில் இருவரில் ஒருவர், அதாவது 50% அளவினர் முதுமையடையும் முன்பாகவே, புகையிலையால் ஏற்படும் கொடிய நோயினால் இறக்கின்றனர். இவ்வாறு, இறந்துபோகும் வாடிக்கையாளர்களை ஈடு செய்வதற்காக சிறுவர்களிடம் சிகரெட் பழக்கத்தை திட்டமிட்டு சிகரெட் நிறுவனங்கள் திணிக்கின்றன.

சிகரெட் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் எல்லோருமே 21 வயதுக்கு முன்பாகத்தான் புகைப்பிடிக்கக் கற்றுக்கொள்கின்றனர். பெரியவர்கள் ஆன பின்பு யாரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்வது இல்லை. குறிப்பாக 10 முதல் 18 வயதுக்கு இடையே தான் மிகப்பெரும்பாலான சிகரெட் அடிமைகள் உருவாகிறார்கள்.

இவ்வாறு, இளம் வயதிலேயே சிகரெட் அடிமைகளை உருவாக்க வேண்டும் (Catch them young) என்பதுதான் சிகரெட் நிறுவனங்களின் உலகளாவிய சதி ஆகும்.

திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் இளைஞர்களின் மானசீக வழிகாட்டிகளாகத் தோன்றுகிறார்கள். சிறுவர்கள் அவர்களுடன் நேருக்கு நேர் பழகுவது போன்ற மானசீக உணர்வுகளைப் பெறுகின்றனர். நடிகர்கள் பின்பற்றும் பழக்கங்களை சிறுவர்களும் பின்பற்றத் தொடங்குகிறார்கள். எனவே தான், சிகரெட் நிறுவனங்கள் திட்டமிட்டு நடிகர்கள் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.

தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் இளம் சிறார்களை ரசிகர்களாகக் கொண்ட முன்னணி நடிகர் விஜய். எனவே, இளம் சிறார்களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும் சிகரெட்டுக்கு அடிமையாக்கும் நோக்கில், சிகரெட் நிறுவனங்கள் திட்டமிட்டு நடிகர் விஜய்யை மரணத்தின் தூதுவராக மாற்றியுள்ளன.

தமிழ்த் திரையுலகினர் சிகரெட் நிறுவங்களின் சதி வலையில் சிக்காமல் விலகி இருக்க வேண்டும். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பலரும் - புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது போல, நடிகர் விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்டவர்களும் அறிவிக்க வேண்டும்.

அதே நேரத்தில், அரசாங்கமும் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, இளம் சிறார்களை சிகரெட் பழக்கத்திலிருந்து காப்பாற்றும் நோக்கில், புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ள படங்களை 'A' படங்களாக சான்றளிக்க வேண்டும். இதன் மூலம் 18 வயதுக்கு கீழான சிறார்கள் இந்தப் படங்களைப் பார்ப்பதைக் குறைக்கலாம். இத்தகைய படங்களின் காட்சிகளை பகலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாமல் இதன் மூலம் தடுக்க முடியும்.

மேலும், புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ள அனைத்துப் படங்களிலும், அப்படங்களுக்காக சிகரெட் நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ லஞ்சம் வாங்கவில்லை என அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மொத்தத்தில், நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். நடிகர் விஜய் இளம் ரசிகர்களின் வாழ்வை பலியிடக் கூடாது. மேலும், திரையுலகினர் சிறார்களைக் கொலை செய்யும் மரண வியாபாரத்தை ஊக்குவிப்பதை கைவிட வேண்டும். அரசாங்கம் அதனை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

குறிப்பு:

'சர்கார்' படத்தின் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் சிகரெட் கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.

அதே நேரத்தில், திரைப்படங்கள் மூலமாக பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள் சிகரெட் விளம்பரங்களைத் திணிக்கின்றன என்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்துகிறது. சினிமாவில் காட்டப்படும் இத்தகைய சிகரெட் விளம்பர காட்சிகளுக்காக சிகரெட் கம்பெனிகள் பெருமளவு பணத்தை லஞ்சமாக அளிக்கின்றன என்பதற்கு ஆதாரம் உள்ளது.

License to Kill எனும் 'ஜேம்ஸ்பாண்ட்' படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளை திணிக்க 2,50,000 டாலர் (சுமார் 2.3 கோடி ரூபாய்) லஞ்சம் அளிக்கப்பட்டது. ஸ்பைடர்மேன் 2 படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் திணிக்க 50,000 டாலர் கொடுக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன் மூன்று படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க 5,00,000 டாலர் (சுமார் 3.5 கோடி ரூபாய்) லஞ்சம் பெற்றார்.

இந்தியாவில் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை அமைக்க சிகரெட் கம்பெனிகள் லஞ்சம் கொடுப்பது உண்மைதான் என பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கய் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜிவ் மேனன் ஆகியோர் கூறியுள்ளனர்.

எனவே, 'சர்கார்' படத்தின் புகைப்பிடிக்கும் விளம்பரங்கள் ஓசி விளம்பரங்களாக இருக்க வாய்ப்பே இல்லை. அவற்றுக்காக லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம்''.

இவ்வாறு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் அருள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x