Published : 19 Nov 2018 10:07 AM
Last Updated : 19 Nov 2018 10:07 AM

திண்டுக்கல் அருகே கஜா புயல் தாக்குதலில் பொங்கல் கரும்பு சேதம்: விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு 

திண்டுக்கல் அருகே கஜா புயல் தாக்கு தலுக்கு 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்ததால் விவசாயி களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகேயுள்ள கிராமங்களான நொச்சி ஓடைப்பட்டி, ராஜக்காபட்டி,

கூவனூத்து புதூர், கம்பளியம்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் கரும்பு பயிரிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிட்டிருந்தனர். சுமார் 30 ஏக்கரில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டு டிசம்பர் மாத இறுதி முதல் படிப்படியாக அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வந்தனர்.

இந்நிலையில், கஜா புயலின் தாக்கத்தால் கரும்புகள் அறுவடைக்கு ஒரு மாதம் இருந்த நிலையில் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து கூவனூத்து புதூரைச் சேர்ந்த விவசாயி சின்ராசு கூறியதாவது:

வழக்கத்தைவிட, இந்த ஆண்டு பொங்கல் கரும்பு நல்ல விளைச்சல் கண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம் என்று இருந்தநிலையில் புயல் தாக்கி கரும்புகளை சாய்த்துவிட்டு சென்றுவிட்டது. டிசம்பர் இறுதியில் அறுவடையை துவக்கி படிப்படியாக பொங்கல் வரை விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும்.

மழை வராமல் கடந்த ஆண்டுகளில் நல்ல விளைச்சல் இன்றி இழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது நல்ல மழை பெய்தபோதும் புயலின் தாக்கத்தால் விளைச்சலை பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜா புயல் மரங்கள், மின்கம்பங்கள், மேற்கூரைகள், வீடுகள் என சேதம் ஏற்படுத்தி கடைசியாக விவசாயிகளையும் விட்டு வைக்காது மக்காச்சோளம், அவரை பந்தல், தென்னை, வாழை உள்ளிட்டவற்றையும் சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x