புயலால் பாதித்த மாவட்டங்களில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? அறிக்கை தர ஆணையரகம் உத்தரவு

புயலால் பாதித்த மாவட்டங்களில் 
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?
அறிக்கை தர ஆணையரகம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன. மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் புயலால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை கண்டறிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கைகளை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புயலால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேவை ஏற்பட்டால் உடனடியாக நடத்தப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in