

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இ.விஜய் ஆனந்த் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:
நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்க வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆணையம் தொடர்பான விதிமுறைகளை உள்ளடக்கிய 124 ஏ என்ற பிரிவு அதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகே இந்த திருத்தம் அமலுக்கு வரும். அதன் பிறகுதான் நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் இன்னும் அமலுக்கே வராத நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால்,
இந்த மசோதாவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், சட்டப்படி அது செல்லாது என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் விஜய் ஆனந்த் கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.