நீட் அனிதா கதையில் ஜூலி நடிக்கும் திரைப்படம்; ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு தந்தை வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் அனிதா கதையில் ஜூலி நடிக்கும் திரைப்படம்; ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு தந்தை வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

ஜூலியை வைத்து 'நீட்' அனிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படத்தை தயாரிக்க அறிவிப்பு வெளியிட்ட இயக்குநருக்கு எதிராக அனிதாவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

நீட் நுழைவுத்தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தை அதிரவைத்த அனிதாவின் மரணத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. அனிதாவின் மரணம் பெரிய அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அனிதாவின் பெயருக்கு இருக்கும் மரியாதை, அவரது இறப்பு போன்றவற்றை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அஜய்குமார் என்பவர் அனிதாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் ‘டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்’ என்ற பெயரில் திரைப்படம்  எடுக்க இருப்பதாக விளம்பரம் செய்தார். இந்தப் படத்திற்காக பூஜை போடப்பட்டு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் அனிதாவாக ஜூலி நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த பூஜையில் ஜூலியும் கலந்துகொண்டார்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட அனிதாவின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். ‘அனிதா எம்பிபிஎஸ்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கக் கோரியும், அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அனிதாவின் தியாகத்தையும், போராட்டத்தையும் வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். படத்தின் இயக்குநர் குழுமூர் கிராமத்திற்குச் சென்றதில்லை எனவும், அனிதாவைப் பற்றிய எந்தக் குறிப்பும் அவரிடம் இல்லை எனவும் வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க  படத்தின் இயக்குநர் அஜய்குமாருக்கு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in