

சிறை விதிகளை மீறியதற்காக ரத்து செய்யப்பட்டிருந்த நளினி- முருகன் சந்திப்பு, ஒரு மாதத்துக்கு பிறகு சனிக்கிழமை நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, வேலூர் மத்திய சிறையில் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நடத்திய திடீர் சோதனையில் முருகனிடம் இருந்து ரூ.2,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சிறை விதிகளை மீறியதற்காக நளினி- முருகன் சந்திப்புக்கு 2 மாதம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் முருகனின் கோரிக்கையை ஏற்று, 2 மாத தடை உத்தரவு ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.
தடைக்காலம் முடிந்ததையடுத்து முருகன்- நளினி சந்திப்பு சனிக்கிழமை நடந்தது. சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் வேலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார், முருகனை பெண்கள் தனிச் சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 30 நிமிட சந்திப்புக்குப் பிறகு மீண்டும் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.