Published : 03 Oct 2018 09:12 AM
Last Updated : 03 Oct 2018 09:12 AM

கம்பன் விழாவில் ‘அப்துல் ரகு - மான்’

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் பட்டிமன்றங்களுக்குத் தமிழ் மேடைப்பேச்சு வரலாற்றில் மிக முக்கியமான பங்கு உண்டு. 1944 முதல் கம்பன் விழாவில் பட்டிமன்றங்கள் நடந்துவருகின்றன. தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், பேராசிரியர் இரா.ராதாகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் பட்டிமன்ற நாயகர்களாக அந்த விழாவுக்குப் பெருமை சேர்த்தார்கள். பட்டிமன்றங்களைப் போலவே கம்பன் கழகம் நடத்தும் கவியரங்க நிகழ்ச்சிகளுக்கும் தனிப்பெருமை உண்டு.

கவிஞர் அப்துல் ரகுமான் அவ்வளவாகப் பிரபலமடையாத காலம் அது. காரைக்குடி கவியரங்கில் ‘பாதுகை’ என்ற தலைப்பில் கவிதை பாடச் சென்றிருந்தார். அப்போது வைணவப் பெரியவர் ஒருவர் ராமரின் பாதுகையைப் பற்றி இஸ்லாமியர் கவிதை பாடுவதா என்று ஆட்சேபித்து கம்பன் கழகத்தை நிறுவி நடத்திவந்த சா.கணேசனிடம் வாக்குவாதம் செய்தார். அவரும் சிரித்துக்கொண்டே, “இலக்கிய மேடையில் எல்லோருக்கும் இடமுண்டு” என்று பதில் சொன்னார். விழா தொடங்கியது. அப்துல் ரகுமான் கவிதை பாடத் தொடங்கினார். “ராமாயணமே ரகு, மான் பின் சென்ற கதைதானே அய்யா! ரகு, மானின் பின் சென்ற கதையைப் பாட ரகுமானுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்குண்டு?” என்றார். ஒரே ஆரவாரம். முன்னர் எதிர்ப்பைக் காட்டிய பெரியவர், நிகழ்ச்சி முடிந்ததும் அப்துல் ரகுமானைக் கட்டியணைத்துக்கொண்டார். “பாதுகா சகஸ்ரத்தில்கூட சொல்லப்படாத புதிய கருத்துகளைச் சொன்னீர்கள்!” என்று பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x