Published : 06 Oct 2018 02:22 PM
Last Updated : 06 Oct 2018 02:22 PM

பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிகளாக உறிஞ்சுகின்றன; சீமான் கண்டனம்

ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள யமஹா, என்பீல்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை நவீனக் கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கினைக் கண்டித்தத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது போராட்ட நோக்கங்களும், அவர்கள் எழுப்புகிற கோரிக்கை முழக்கங்களும் மிகத் தார்மீகமானவை.

மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதாகக் கூறி அமைக்கப்பட்டு இந்நாட்டின் வரிச்சலுகைகளையும், இன்னபிற வசதிகளையும் மிக எளிதாகவும், மலிவாகவும் பெற்றுக் கொண்டு பெரும் லாபத்தை ஈட்டிவரும் பன்னாட்டு தொழிற்சாலை நிர்வாகங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களை கொத்தடிமையாய் நடத்தி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யமஹா மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார்ஸ் 150 கோடி முதலீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை என்பது வெறும் 807 மட்டும்தான். மற்றத் தொழிலாளர்கள் யாவரையும் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாக வைத்து இதுநாள் வரை காலங்கடத்திக் கொண்டு வருகிறது.

இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்து விடுவதாகக் கூறி அவர்களை வேலைக்கு நியமித்த நிர்வாகம், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முன்வரவில்லை. எந்தவித ஊதிய உயர்வையும் அளித்திடவுமில்லை. அவ்வூதிய உயர்வும் ஆண்டுக்கு 7,00 ரூபாய் உயர்த்திக் கொடுத்தாலே பெரிய காரியம் என்கிற அளவில்தான் இருக்கிறது.

விலைவாசி உயர்வு விண்ணைமுட்டி, பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிப்போடுகிற தற்காலச் சூழலில் இந்த 700 ரூபாய் ஊதிய உயர்வு எந்தவகையில் தொழிலாளர்களுக்குப் பயன்படும் என்பது ஆலை நிர்வாகத்திற்கே வெளிச்சம். இவ்வாறு தொழிலாளர் நல உரிமைகள் நசுக்கப்படுவது மட்டுமல்லாமல் தொடர் அடக்குமுறைகள் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டு மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன.

இவற்றிற்கெதிராகத்தான் அவ்வாலைத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்பீல்டு தொழிற்சாலையில் 15 மாதங்களுக்கு மேலாகப் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய மறுத்ததோடு, அவர்களை பணிநீக்கமும் செய்துள்ளது. மேலும், தொழிற்சங்கம் அமைத்ததற்காக இரு நிரந்தரப் பணியாளர்களை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கெதிராக அணிதிரண்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தினைச் செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த தீர்வையும் முன்னெடுக்க ஆலை நிர்வாகம் முன்வரவில்லை. தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கெதிராக இதேபோன்று 10,000 க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவோம் எனக் கூறி கால்பதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கிற அட்டைப்பூச்சிகளாக இருக்கின்றன. வரம்பற்ற மனித உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள், உழைப்பாளர்களுக்குரிய அடிப்படை வசதிகளையோ, தார்மீக உரிமைகளையோ தர மறுத்து கொத்தடிமைகளாய் வைத்து அவர்களது ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

அப்பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களையோ, விதிகளையோ துளியளவும் மதிப்பதில்லை. தங்களது கொள்ளை இலாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ள அந்நிறுவனங்கள், மண்ணின் மக்களை இன்னொரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிற நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

ஆகவே, ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடித் தீர்வைக் காண வழிவகைகளை செய்ய வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x