Published : 13 Apr 2014 10:30 AM
Last Updated : 13 Apr 2014 10:30 AM

வெற்றி வாய்ப்பை தானாக கெடுத்துக் கொண்டது அதிமுக: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

இடதுசாரி கட்சிகள் போட்டியிடும் தொகுதி களில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். முதல்கட்ட பிரச்சாரம் தந்திருக்கும் உற்சாகத்துடன் ’தி இந்து’ வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

உங்கள் உற்சாகத்துக்கு காரணமென்ன ?

திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தபோது பார்க்காத உற்சாகத்தை எங்கள் தோழர் களிடையே இப்போது பார்க்கி றோம். தனித்து மட்டுமல்ல, தனித்தன்மை யோடும் நாங்கள் போட்டியிடுவதால் கட்சியினர் மட்டுமின்றி, ஆதரவாளர்கள், இடதுசாரி ஜனநாயகப் போக்கை விரும்பும் அனைவரும் பெரும் எழுச்சியோடு பணியாற்றி வருகிறார்கள்.

தனித்துப் போட்டி என்பது சரி. தனித் தன்மை என்று கூறுகிறீர்களே. அது என்ன?

ஊழலுக்கு எதிராகவும், வகுப்புவா தத்துக்கு எதிராகவும், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து களத்தில் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே. ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு பாஜக.வோ அல்லது அதிமுக.வுக்கு திமுக.வோ மாற்றாக இருக்க முடியாது. உண்மையான மாற்று சக்தி நாங்கள்தான். இதுதான் எங்களின் தனித்தன்மை.

ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் வரவேற்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இல்லையே?

இது தவறானது. ஊழலுக்கு எதிராக மட்டும்தான் ஆம் ஆத்மி கட்சியினர் பேசுகின்றனர். ஆனால் , அந்த ஊழலுக்கு மூலகாரணமான நவீன ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளை அவர்கள் எதிர்ப்பதில்லை. இடதுசாரி கட்சிகளின் இந்த மக்கள் நலன் சார்ந்த நிலைபாட்டுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இடதுசாரி கட்சிகள் இவ்வாறு புறக்கணிக்கப்பட காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?

இடதுசாரி கட்சிகள் பலம் பெறுவதை பெரும் முதலாளிகள் விரும்புவதில்லை.

திமுக-வின் 2ஜி ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட்கள் முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு பற்றி அதிகம் பேசுவதில்லை என்று கூறப்படுகிறதே..?

அப்படியில்லை. நாங்கள் எல்லோரின் ஊழல்களையும் எதிர்க்கிறோம். சிறுதாவூர் நிலப் பிரச்சினையை முதலில் எழுப்பி, போராட்டங்களை நடத்தியது எங்கள் கட்சிதான்.

திமுக, அதிமுக.வுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஒரு அணியை உருவாக்க முடியாத நிலையில், இன்று பாஜக அத்தகைய ஓர் அணியை உருவாக்கியிருக்கிறதே ?

பாஜக-வுடன் அணி சேர்வது என்று வைகோ எப்போதோ முடிவு செய்துவிட்டார். மதிமுக-வுக்கென இப்போது எந்தக் கொள்கையும் இல்லை. பாமக ஜாதி அரசியலைத்தான் முன்னிலைப்படுத்துகிறது. ஒரே நேரத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக-வுடன் பேச்சு வார்த்தை நடத்தும் தேமுதிக-வுக்கென தனித்த கொள்கைகள் எதுவும் இல்லை. இந்த சூழலில் இதுபோன்ற கட்சிகளை இணைத்து உருவாக்கும் அணியை மாற்று அணியாகக் கருத முடியாது. இத்தகைய சக்திகளை இணைத்துக் கொண்டு அணி அமைப்பது என்பது எங்களுக்கு சாத்தியமானது அல்ல.

அதிமுக.தான் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறதே..?

அதற்கான வாய்ப்பு முன்பு இருந்தது. அந்த வாய்ப்பை அவர்களே கெடுத்துக் கொண்டு விட்டார்கள். தற்போது அந்த வாய்ப்பு இருப்பதாகக் கூற முடியாது.

அப்படியென்றால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் ?

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கவுள்ள முடிவு ஏராளமான ஆச்சரியங்களை ஏற்படுத்துவதாக இருக்கும். குறிப்பாக இடதுசாரி கட்சிகள் போட்டியிடும் 18 தொகுதிகளின் முடிவுகள் யாரும் எதிர்பாராதவையாக அமையும் என்பது நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x