

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனது மன்ற நிர்வாகி களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். கட்சிக் கொடி, சின்னம், கொள்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
2 மணி நேரம் ஆலோசனை
இந்த ஆலோசனை சுமார் 2 மணி நேரம் நீடித்துள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்த் மக்கள் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி காந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வரும் டிசம்பர் 30-ம் தேதியுடன் அவரது அறிவிப்பு ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அந்த தேதிக்கு முன்னதாகவே கட்சிப் பெயரை ரஜினிகாந்த் நிச்சயம் அறிவித்து, பொதுமக்களை சந்திக்கப் புறப்படுவார்’’ என்றார்.
அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததும், தனது ரசிகர் மன்றங்களை ‘ரஜினி மக்கள் மன்றமாக’ ரஜினி மாற்றினார். மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க் கையும் நடந்து வருகிறது. பொறுப்பாளர்களும் அறிவிக்கப் பட்டு வருகின்றனர்.
அத்துடன் மன்ற விதிமுறை களையும் ரஜினிகாந்த் அறிவித் தார். மத விவகாரங்களில் தீவிர மாக இருப்பவர்களை உறுப் பினர்களாக சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் புத்தகமாக அச்சிட்டு மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுபவர்களை நீக்கு வதும், அப்பொறுப்பில் புதியவர் களை சேர்ப்பதுமாக அரசியல் நடவடிக்கைகளும் தொடர்கின் றன. இதுபற்றிய தகவல்கள் ரஜினி மக்கள் மன்ற இணைய தளத்தில் அவ்வப்போது வெளி யிடப்படுகின்றன.
இந்நிலையில், விரைவில் புதிய கட்சியை அறிவிப்பேன் என்று திட்டவட்டமாக ரஜினி தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளை அவர் முடுக்கிவிட் டுள்ளார்.