Last Updated : 26 Aug, 2014 08:59 AM

 

Published : 26 Aug 2014 08:59 AM
Last Updated : 26 Aug 2014 08:59 AM

ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம்: பேஸ்புக் மூலம் பிரபலமாகி வரும் பிரச்சாரம்

“ரைஸ் பக்கெட் சேலஞ்ச்” என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் பேஸ்புக் மூலம் தற்போது பிரபலமாக தொடங்கியுள்ளது.

அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி, வழங்கி அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும். அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் செய்யலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள்.

இதற்கான பேஸ்புக் பக்கம் ஹைதராபாத்தில் வசிக்கும் மஞ்சு லதா கலாநிதி என்பவரால் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கிய முதல் நாளே இந்தப் பக்கத்தை கிட்டத்தட்ட 500 பேர் லைக் செய்துள்ளனர். பக்கத்தை தொடங்கிய மஞ்சு லதா அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஏழை ஒருவருக்கு ஒரு படி அரிசி வழங்கி அதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டுள்ளார். அவரது பக்கத்தை லைக் செய்துள்ள கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ண ராஜா ஆதரவற்றோர் இல்லத்துக்கு மூன்று மூட்டை அரிசி வாங்க நிதி வழங்கி அதை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதே போல் மேலும் சிலரும் தங்களுக்கு அருகில் உள்ள ஆதரவற்றோர் அல்லது ஏழைகளுக்கு தங்களால் இயன்ற வகையில் உணவு வழங்கியுள்ளனர்.

முதல் நாளே இத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பக்கத்தில், மஞ்சு லதா “அரிசி என்பது இந்தியாவின் பிரதான உணவு. அதை தேவையானவர்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து, கமெண்ட் போடுவதோடு நிறுத்தி விடாதீர்கள். உங்கள் வீட்டில் பணிபுரியும் நபர், ஓட்டுநர், சாலையோர வியாபாரி, யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசியை கொடுத்து உதவுங்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.

இது “ஐஸ் பக்கெட் சேலஞ்ச்” என்று மேற்கத்திய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டதன் இந்திய வடிவமாக கருதப்படுகிறது. ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருவர் தனது தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றிக் கொண்டு அதன் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும். அதேபோன்று ‘ரைஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்ற பெயரில் ஏழைகளுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் விரைவில் சமூக வலைதளங்களை ஆட்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் பதிவில் இருந்து..

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் - அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் >https://www.facebook.com/ricebucketchallenge

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x