Last Updated : 07 Oct, 2018 02:19 AM

 

Published : 07 Oct 2018 02:19 AM
Last Updated : 07 Oct 2018 02:19 AM

மீன்பிடித் துறைமுகங்களில் ரூ.8 கோடி செலவில் ஐஸ் கட்டி உற்பத்தி ஆலைகள் 

மீன்வளத் துறை சார்பில் தேங்காய்பட்டினம், குளச்சல், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மூக்கையூர் ஆகிய 5 துறைமுகங்களில் ரூ.8 கோடி செலவில் ஐஸ்கட்டிகள் உற்பத்தி செய்யும் ஆலைகள் நிறுவப்பட உள்ளன.  இதன்மூலம், மீனவர்களுக்கு  குறைந்த விலை யில்  ஐஸ்கட்டிகள் கிடைக்கும்.

தமிழகத்தில் தற்போது 9 பெரிய துறைமுகங்கள் உள்ளன. மேலும், 6,500 விசைப்படகுகளும், 39 ஆயிரம் நாட்டுப் படகுகளும் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீன்வளத் துறைசார்பில் 5 மீன்பிடித் துறை முகங்களில் ஐஸ்கட்டிகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

மீனவர்களில் சிலர் அண்மைக் கடலிலும், சிலர் தங்கு கடல் என அழைக்கப்படும் ஆழ்கடல் பகுதிகளிலும் சென்று மீன் பிடிக்கின்றனர். அண்மைக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்  ஓரிரு நாட்களிலும், ஆழ்கடலுக்குச் செல்பவர்கள் 10 முதல் 20 நாட்கள் கழித்தும் கரை திரும்புகின்றனர். இவ்வாறு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை கெடாமல் பாதுகாக்க  படகில் ஐஸ் கட்டிகளை உடன் எடுத்துச் செல்கின்றனர். இதற்காக, குறைந்தபட்சம் ஒரு டன் முதல் அதிகபட்சமாக 10 டன் வரை ஐஸ்கட்டிகளை அவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

இதற்காக மீனவர்கள்  துறைமுகத்துக்கு வெளியே உள்ள தனியார்  ஆலைகளில் இருந்து ஐஸ் கட்டிகளை கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் மீனபிடித் துறைமுகத்துக்குள் ஐஸ்கட்டிகளை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க உள்ளது. முதற்கட்டமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டினம், குளச்சல், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் மீன்பிடி துறைமுகங்களில் இந்த ஆலைகள் தலா ரூ.1.6 கோடி என மொத்தம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிதி ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி  திட்ட நிதியில் இருந்து பெறப்படும்.

இந்த ஆலையில், நாளொன் றுக்கு  30 டன் எடையளவு ஐஸ்கட்டிகள் உற்பத்தி செய்யப்படும். இந்த ஐஸ்கட்டிகள் வெளிச்சந்தையில் விற்கப் படுவதை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதன் மூலம், மீனவர்கள் குறைந்த விலையில் ஐஸ்கட்டிகளை பெற்று நல்ல முறையில் மீன்களை கெட்டுப்போகாமல் பதப்படுத்தி தரமானதாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியும். அடுத்தக் கட்டமாக, சென்னை உள்ளிட்ட மற்ற மீன்பிடி துறைமுகங்களிலும் இந்த ஐஸ்கட்டி உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x