Published : 09 Oct 2018 08:21 PM
Last Updated : 09 Oct 2018 08:21 PM

பிரதமர் - முதல்வர் சந்திப்பு; ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ பேச்சை வாபஸ் பெற்ற ஆளுநர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்தித்துப் பேசிய பின்னர் ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன்? ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அக்டோபர் 6-ம் தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய தமிழக ஆளுநர் மூன்று நாட்கள் கழித்து திடீரென்று, ஊழல் நடந்ததாக நான் எதுவும் கூறவில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாநிலத்தின் உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர், ''துணைவேந்தர் நியமனங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது. அதனால் துணைவேந்தர் நியமன நடைமுறையில் மாறுதல் கொண்டு வர முடிவு செய்தேன்'' என்று பேசியது வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தது.

அப்போதெல்லாம் அமைதி காத்த ஆளுநர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன்? ஊழல் அதிமுக அரசையும், இந்த துணைவேந்தர் நியமனங்களைச் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற உள்நோக்கம் அந்த மறுப்பறிக்கையில் எதிரொலிக்கிறது.

“ஆளுநர் பதவியில் உண்மையாக இருப்பேன்” (faithfully execute the office of the Governor) என்று அரசியல் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளவர் இப்போது ஊழல்வாதிகளை காப்பாற்ற மறுப்பறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டது “முதல்வர் - பிரதமர் சந்திப்பிற்கான” கைமாறா? என்ற மிகப்பெரிய சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஊழல் நடக்கிறது என்று தகவல் வந்தாலே அதன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் ஆளுநர் பதவியில் இருப்போரின் கண்ணியத்திற்கு அடையாளம். இந்த விஷயத்தில் கல்வியாளர்கள் தன்னிடம் துணைவேந்தர் பதவி நியமனங்களுக்கு ஊழல் நடக்கிறது என்று கூறியதாக ஆளுநரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்படியிருந்தும் துணைவேந்தர் நியமன ஊழல் பற்றி முதல்வர், பிரதமரைச் சந்திப்பதற்கு முன்னும் பின்னுமாக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆளுநர் பதவியின் மீது வைத்துள்ள மாண்பை, மரியாதையை சிறுமைப்படுத்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியொரு நெருக்கடி எங்கிருந்து ஆளுநருக்கு வந்தது?

ஊழல் அதிமுக ஆட்சிக்கு வக்காலத்து வாங்கி விட்டு இன்னொரு பக்கம் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஆளுநரும், அதிமுக அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்கள். அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துள்ள ஆளுநர் அதன் கீழ் வழங்கப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில், நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை விமான நிலையத்தில் இடைமறித்துக் கைது செய்ய வைத்ததை நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்து பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அரசு நீடித்தால் பாஜகவின் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய பாஜக அரசும், அந்த அரசால் ஆட்டுவிக்கப்படும் ஆளுநரும் நினைத்தால் தமிழ்நாட்டு மண் அதற்கு ஒருபோதும் இடம் தராது என்பது மட்டுமல்ல - ஜனநாயக ரீதியாக மக்களின் கடும் கோபத்தைச் சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஊழல் அதிமுக அமைச்சர்களையும், முதல்வரையும், துணைவேந்தர் பதவிக்கு கோடிகளை பெற்றவர்களையும் காப்பாற்றும் முனைப்பிலிருந்து விலகி, அதிமுக அரசின் மீது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழல் புகார்கள் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் பிரதமரைச் சந்தித்து விட்டார் என்பதற்காக அதிமுக அரசின் ஊழல்களை மூடி மறைக்கும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டு விடாமல் தடுத்து தன் பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் ஆளுநருக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x